வீட்டுக்கு ஒரு இலவச இன்வெர்ட்டர் கொடுக்க வேண்டும்: அரசுக்கு அதிமுக கோரிக்கை


புதுச்சேரி: புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் நேற்று முதல்வர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து மனு ஒன்று அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: வரும் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் புதிய திட்டங்களை நிதி நிலைக்கு ஏற்ப அறிவிக்கப்படுவதோடு, அறிவிக்கப்பட்ட திட்டங்களை உடனுக்குடன் முழுமையாக செயல்படுத்த வேண்டும். வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் ஏழைகளுக்கு வீட்டுக்கு ஒரு இலவச இன்வெர்ட்டர் அரசு சார்பில் வழங்க வேண்டும். வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இதனை அறிவிக்க வேண்டும்.

பல ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ள நிலையில் உள்ளாட்சி துறைகளில் பணிபுரியும் அத்தனை ஊழியர்களுக்கும் உரிய ஊதியத்தை அரசே வழங்க வேண்டும். பணியின் போது உயிரிழந்த தூய்மை பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி வழங்க வேண்டும்.

புதுச்சேரியில் 1964ம் ஆண்டுக்கு முன்பு தாய் வழி குடியிருப்பு ஆதாரம் உள்ளவர்களின் குடும்பத்தினருக்கும் பூர்வகுடி அட்டவணை இன சான்றிதழ் வழங்க, வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரிய அறிவிப்பு வெளியிட வேண்டும்.

ஏற்கெனவே அறிவித்தபடி பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து அரசு, அரசு சார்பு துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x