‘82 வயதாகிவிட்டதே, இனி என்ன செய்வார் என நினைக்காதீர்கள்’ - சென்னையில் இளையராஜா முக்கிய அறிவிப்பு!


சென்னை: 'இவருக்கு 82 வயதாகிவிட்டதே, இனி இவர் என்ன செய்ய போகிறார் என நினைக்காதீர்கள். இனிதான் ஆரம்பமே. தற்போது 13 நாடுகளில் எனது சிம்பொனி இசையை நிகழ்த்துகிறேன்' என இளையராஜா தெரிவித்துள்ளார்

லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் முடித்து சென்னை திரும்பிய இளையராஜா சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ மிகவும் மகிழ்வான இதயத்தோடு, மலர்ந்த முகத்தோடு, நீங்கள் என்னை வழி அனுப்பி வைத்ததே இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த இறைவன் அருள் புரிந்தான். இது சாதாரண விஷயம் அல்ல. மியூசிக் எழுதலாம். மியூசிக் எழுதி கொடுத்தால் அவர்கள் வாசிக்கலாம். ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி வாசித்தால் மியூசிக் எப்படி இருக்கும். இப்படி நாம் எல்லோரும் பேசுற மாதிரி ஒருத்தருக்கும் புரியாத மாதிரி இருக்கும்.

நான் எழுதிய இசைக் குறிப்புகளை இசை கோர்ப்பாளர் நிக்கி தாமஸ் அழகாக அவருடைய குழுவினருடன் சிம்பொனியை வாசித்தார். சிம்பொனியை அரங்கேற்றம் போது எந்த விதி மீறலும் இல்லாமல் சிறப்பாக நடந்தது. சிம்பொனி நான்கு பகுதிகளை கொண்டது. சிம்பொனி நான்கு பகுதிகள் முடியும் வரை யாரும் கைதட்ட மாட்டார்கள். கைதட்ட கூடாது என்பது தான் விதிமுறை. ஆனால் நமது ரசிகர்களும் அங்கு வந்திருந்த பொதுமக்களும், ஒவ்வொரு பகுதி முடியவும் கைதட்டினார்கள். இசை கோர்ப்பாளரே ஆச்சர்யமடையும் அளவுக்கு ஆரவாரம் இருந்தது. இந்த நிகழ்ச்சியில் 80 பேர் வாசித்தனர்.

என்னை வரவேற்க வந்த அனைவருக்கும் நன்றி, தமிழக அரசின் வரவேற்பு என்னை நெகிழச் செய்கிறது. இந்த நிகழ்ச்சி வெற்றியடைய இறைவன் அருள்புரிந்தார்.என்னை தெய்வமாக கொண்டாடுபவர்கள் இருக்கிறார்கள். என்னை கடவுள், இசைக்கடவுள் என்கிறார்கள். எப்படி இருந்தாலும் நான் சாதாரண மனிதனை போல தான் வேலை செய்து கொண்டு இருக்கிறேன். என்னை இசைக்கடவுள் என்று சொல்லும் போது எனக்கு எந்த எண்ணம் தோன்றும் என்றால், இளையராஜா அளவுக்கு கடவுளை கீழே இறக்கிவிட்டீர்கள் என்று தான் தோன்றும். நான் சாதாரண மனிதன்தான்.

எனக்கு 82 வயதாகிவிட்டது, இனி இவர் என்ன செய்ய போகிறார் என நினைக்காதீர்கள். இனிதான் ஆரம்பமே. தற்போது 13 நாடுகளில் எனது சிம்பொனி இசையை நிகழ்த்துகிறேன். அக்டோபர் 6ஆம் தேதி துபாய், செப்டம்பர் 6ஆம் தேதி பாரீஸ், ஜெர்மன் என வரிசையாக நிகழ்ச்சிகள் உள்ளன. தமிழக மக்கள் அனைவரும் என்னை வாழ்த்தி கொண்டு இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

சிம்பொனி இசையை டவுன்லோடு செய்து கேட்க வேண்டாம். நேரில் வந்து கேளுங்கள். இந்தியாவிலும் அரங்கேற்றப்படும். அப்போது அமைதியாக இசையை ரசிக்கலாம். சிம்பொனியை யாரும் டவுன்லோடு செய்து கேட்க வேண்டாம்; ஏனென்றால் பயன்படுத்திய 80 வாத்தியக் கருவிகளின் இசையை உணர முடியாது. என் மீது மக்கள் அவ்வளவு அன்பு வைத்து இருக்கிறீர்கள்.
பண்ணைபுரத்தில் இருந்து எனது வெறுங்கால்களில் எப்படி வந்தேனோ, அதே போல் இன்றும் இந்த இடத்தில் நிற்கிறேன்.

இளைஞர்கள் உணர வேண்டும். இளைஞர்கள் என்னை முன் உதாரணமாக வைத்து கொண்டு அவர்களது துறையில் மென்மேலும் நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பது என்னுடைய அறிவுரை. நன்றி வணக்கம். இவ்வாறு இளையராஜா பேசினார்.

முன்னதாக இளையராஜாவை அமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்தி வரவேற்று, அவர் இந்தியாவுக்கே பெருமை என பாராட்டினார். அது போல் பாஜக நிர்வாகிகள், அரசியல் கட்சியினர், திரையுலகினர் இளையராஜாவை வரவேற்று வாழ்த்தி பேசினர்.

x