திருத்​தணி காய்​கறி சந்​தைக்கு காம​ராஜர் பெயரை நீக்கிவிட்டு கருணாநிதி பெயரை சூட்​டி​னால் போராட்​டம் நடத்​துவோம்: அன்​புமணி


சென்னை: திருத்தணி காய்கறி சந்தைக்கு காமராஜர் பெயரை நீக்கி விட்டு, கருணாநிதியின் பெயரை சூட்டினால், பாமக தொடர் போராட்டங்களை நடத்தும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருத்தணி ம.பொ.சி. சாலையில் செயல்பட்டு வரும் காய்கறி சந்தைக்கு, அங்குள்ள வணிகர்களின் கோரிக்கைப்படி ரூ.3.02 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது. காலம் காலமாக காமராஜர் சந்தை என்று அறியப்பட்ட அந்த சந்தைக்கு இப்போது, கலைஞர் நூற்றாண்டு காய்கறி அங்காடி என பெயர் மாற்றம் செய்ய திருத்தணி நகராட்சி தீர்மானித்திருக்கிறது.

திருத்தணி நகராட்சியின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், காய்கறி சந்தைக்கு காமராஜரின் பெயரே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அங்குள்ள பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர். ஆனால், அதையும் மீறி கலைஞர் நுாற்றாண்டு காய்கறி அங்காடி என்ற பெயரில் சந்தையை திறப்பதற்கான முயற்சிகளில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது. இது எந்த வகையிலும் நியாயமல்ல.

தமிழகம் கண்ட தலைசிறந்த அரசியல் தலைவர்களில் காமராஜர் குறிப்பிடத்தக்கவர். கருணாநிதியாலும் மதித்து போற்றப்பட்டவர். அப்படிப்பட்டவரின் பெயரை நீக்கி விட்டு, கருணாநிதியின் பெயரை வலிந்து திணிக்க முயல்வது ஏற்புடையதல்ல.

இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் கருணாநிதிக்கு புகழ் சேர்க்க முடியாது. மாறாக, நடுநிலையாளர்களின் வெறுப்புக்குதான் ஆளாக நேரிடும் என்பதை தமிழக ஆட்சியாளர்கள் உணர வேண்டும். எனவே, திருத்தணி சந்தைக்கு சூட்டப்பட்டுள்ள காமராஜரின் பெயரை மாற்றும் முடிவை அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால் தொடர் போராட்டங்களை பாமக நடத்தும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

x