சிவகங்கை: கீழடி திறந்தவெளி அகழ்வைப்பக பணிக்காக அகழாய்வு நடைபெற்ற இடத்தை பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே ஏற்கெனவே கீழடி அகழ் வைப்பகம் கட்டப்பட்டு தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதை ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர். அதேபோல் அகழாய்வு நடைபெற்ற இடத்தையும் பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில் அகழாய்வு நடைபெற்ற இடத்தில் 5,914 சதுர மீட்டருக்கு ரூ.17.80 கோடியில் திறந்தவெளி அகழ் வைப்பகம் அமைக்கும் பணியை ஜன.23-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
பணிகள் இடையூறின்றி நடைபெறவும், பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும் அகழாய்வு நடைபெற்ற இடத்தை பார்வையிட இன்று (மார்ச் 9) முதல் தடை விதிக்கப்பட்டது. ஆனால் கீழடி அகழ் வைப்பகத்தை பார்வையிட பொதுமக்கள் தொடர்ந்து அனுமதிக்கப்படுவர் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.