கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே அரசுப் பள்ளி ஆண்டு விழாவில் அரசியல் கட்சி துண்டு அணிந்து மாணவர்கள் நடனமாடிய விவகாரம் தொடர்பாகத் தலைமை ஆசிரியர் உட்பட 2 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் சோப்பனூர் அரசு உயர் நிலைப் பள்ளியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளியின் ஆண்டு விழா நடந்தது. இதையொட்டி, மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதில், ஒரு பாடலுக்கு அரசியல் கட்சி துண்டுகளை கழுத்தில் அணிந்து கொண்டு மாணவர்கள் நடனமாடினர். இதற்கு மற்றொரு தரப்பு மாணவர்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து அங்கு வந்த நாகரசம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் சங்கீதா தலைமையிலான போலீஸார், பெற்றோரை அமைதிப்படுத்தினர். தொடர்ந்து விழா நடந்து முடிந்தது. இந்நிலையில், அரசியல் கட்சி துண்டு அணிந்து மாணவர்கள் நடனமாடிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது.
இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனிராஜ் விசாரணை நடத்தினார். மேலும், மாணவர்கள் அரசியல் கட்சி துண்டு அணிந்து நடனமாடியதைத் தடுக்கத் தவறிய தலைமை ஆசிரியர் விஜயகுமார், பன்னிஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளிக்கும், ஆண்டு விழா ஏற்பாடுகளைச் செய்த பட்டதாரி ஆசிரியர் சுப்பிரமணி, மேட்டுப்புலியூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கும் இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.