சென்னை: கட்சியின் உட்கட்சி விவகாரம் குறித்து பொதுவெளியில் யாரும் பேசக்கூடாது. தனிப்பட்ட பிரச்சினைகளை மனதில் வைத்துக்கொண்டு தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டக் கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ராஜேந்திர பாலாஜிக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்
தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலமாக உரையாடி வருகிறார். திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களின் முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி உரையாடி வருகிறார்.
இந்த கூட்டத்தில், ‘கட்சியின் உட்கட்சி விவகாரம் குறித்து பொதுவெளியில் யாரும் பேசக்கூடாது. தனிப்பட்ட பிரச்சினைகளை மனதில் வைத்துக்கொண்டு தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டக் கூடாது. கருத்து வேறுபாடு இல்லாமல் ஒற்றுமையாக தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்” என்று இபிஎஸ் பேசியுள்ளார்
சில நாட்களுக்கு முன், விருதுநகரில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில், பாண்டியராஜனுக்கு சால்வை அணிவிக்க வந்த நிர்வாகியை, மேடையிலேயே ராஜேந்திர பாலாஜி கன்னத்தில் அறைந்தார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விருதுநகர் அதிமுக வில் குறுநில மன்னர் போல் ராஜேந்திர பாலாஜி செயல்படுகிறார் என, பாண்டியராஜன் விமர்சித்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து சிவகாசியில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “ அதிமுகவில் நான் ஒரு குறுநில மன்னர்தான். நான் வெற்றி வந்தாலும் தோல்வி வந்தாலும் அதிமுக இயக்கத்தில்தான் இருப்பேன். கட்சியை காட்டிக்கொடுத்தவர் மாஃபா பாண்டியராஜன். எனக்கு வரலாறு உள்ளது. உனக்கு என்ன வரலாறு இருக்கு?. நான் எம்ஜிஆர், புரட்சி தலைவியின் தொண்டன். எனக்கு உடம்பில் அதிமுக ரத்தம் ஓடுகிறது. உனக்கு எந்த ரத்தம் ஓடுகிறது.
முதலில் காங்கிரஸ், பிறகு தமாகா, பிறகு பாஜக, பிறகு தேமுதிக, அப்புறம் அதிமுக, அப்புறம் ஓபிஎஸ், அப்புறம் அதிமுக. உனக்கு வெட்கமாயில்லையா?. நீ என்கூட போட்டி போடுகிறாயா?. இயக்கத்தை காட்டிக்கொடுத்துவிட்டு ஓடியவன் நீ. ஒரு வழக்கு வந்தால் நீ கட்சியை விட்டு ஓடிவிடுவாய். என் மீது எத்தனை எத்தனை வழக்கு போட்டு மிரட்டினாலும் எடப்பாடியார் பக்கம்தான் நிற்பேன். அவர் எல்லோரையில் அரவணைத்து செல்லவேண்டும் என்கிறார். அதனால்தான் பலரையும் ஏற்றுக்கொள்கிறோம். விருதுநகர் மாவட்ட அதிமுகவில் என்னை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது. அதிமுகவை வாழவைக்க எந்த நிலைக்கும் நான் செல்வேன்” என்று கூறினார்.
இதன்பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் பாண்டியராஜன் சந்தித்து பேசினார். கட்சி நிர்வாகிகள் மத்தியில், தன்னை ராஜேந்திர பாலாஜி விமர்சித்தது குறித்து, அப்போது அவர் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்தே இன்றைய ஆலோசனை கூட்டத்தில் இபிஎஸ் மறைமுகமாக இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார் என சொல்லப்படுகிறது.