மதுரை மாவட்ட கண்மாய்களில் துணிச்சலாக நடக்கும் மண் கொள்ளை: பொதுமக்கள் புகார்


படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: மதுரை மாவட்ட கண்மாய்களில் இரவு நேரங்களில் மண் அள்ளி லாரிகளில் கடத்திச் சென்று செங்கல் சூளைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றை தவிர பிரதான ஆறுகள், சிற்றாறுகள், அணைகள் இல்லை. வைகை பெரியாறு பாசன கால்வாய்கள், கண்மாய் பாசன கால்வாய்களை நம்பியே விவசாயம் நடக்கிறது. கடந்த காலத்தில் கண்மாய்களில் மழைநீர் தேக்கி வைத்து ஆண்டு முழுவதும் கால்வாய் பாசனம் மூலம் விவசாயிகள் பயிர் சாகுபடி செய்தனர்.

தற்போது போதுமான மழை பெய்தாலும், கண்மாய்கள், கால்வாய்கள் போதிய பராமரிப்பு இல்லாததால் தண்ணீரை முழுமையாக தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக விவசாயப் பரப்பு குறைந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக விவசாயம் செய்யப்படாத கிராமங்களில் உள்ள கண்மாய்களில் உள்ள மண் கொள்ளையடிக்கப்படுவது அதிகரித்துள்ளது. கால்வாய்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வறட்சிக்கு இலக்கான முடுவார்பட்டி கிராமத்தில் நல்லூர் கண்மாய், ஆதிமூலம் பிள்ளை கண்மாய் ஆகியவற்றில் சவுடு மணல் கலந்த வண்டல் மண் அதிகமாக உள்ளது.

இந்த கண்மாய்களில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் மண் அள்ளப்பட்டு லாரிகளில் கடத்து கின்றனர். கண்மாய்களில் இருந்து கொள்ளையடிக்கப்பபடும் மண், மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள செங்கல் சூளைகளில் விற்பகப்படுகிறது. இது தொடர்பாக காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பொதுமக்களும் தகவல் தெரிவித்தாலும், அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ”இரவு 10 மணிக்கு மேல் மண் அள்ளும் இயந்திரம், லாரிகளுடன் 10-க்கும் மெற்பட்ட நபர்கள், முடுவார்பட்டி கிராமத்தில் நல்லூர் கண்மாய், ஆதிமூலம் பிள்ளை கண்மாய்களுக்கு வருகின்றனர். இங்கிருந்து மண்ணை அள்ளி நாளொன்றுக்கு 10 லாரிகளில் கடத்திச் செல்கின்றனர். செங்கல் சூளைகளில் செங்கல் தயாரிப்பதற்கு ஒரு லாரி செம் மண்ணை ரூ.7 ஆயிரத்துக்கும், வண்டல் மண்ணை ரூ.7,500-க்கும் விற்பனை செய்கின்றனர். மேலும், தனியார் ஒப்பந்ததாரர்கள் மேற்கொள்ளும் சாலைப் பணிகளில் பள்ளங்களை நிரப்பவும் மண்ணை வாங்குகின்றனர்.

மண் அள்ளிய கண்மாய் பகுதிகள் தற்போது கட்டாந்தரையாக மாறியுள்ளது. இந்த மண் கொள்ளை நீடித்தால் முடுவார் பட்டி கிராமத்தில் உள்ள நல்லூர் கண்மாய், ஆதிமூலம் பிள்ளை கண்மாய் இருந்த இடம் தெரியாமல் பள்ளத்தாக்குகளாக மாறிவிடும். புகார் தெரிவிக்க உள்ளூர் மக்கள் அச்சப்படுகின்றனர் என்று கூறினர்.

x