சென்னை மெட்ரோ ரயிலில் வாட்ஸ் அப் செயலியில் டிக்கெட் எடுக்கும் வசதி பாதிப்பு: பயணிகள் அவதி


சென்னை: மெட்ரோ ரயிலில் பயணிக்க ஏதுவாக, வாட்ஸ்-அப் செயலி வாயிலாக டிக்கெட் எடுக்கும் சேவையில் நேற்று திடீரென பாதிப்பு ஏற்பட்டது.

மெட்ரோ ரயில்கள் சென்னையில் இரண்டு வழித் தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரி சராசரியாக 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர். சென்னையில் மெட்ரோ ரயில்களில் பயணிக்க காகித டிக்கெட் இன்றி, வாட்ஸ்-அப் செயலி வாயிலாக டிக்கெட் எடுக்கும் வசதி இருக்கிறது. பயணிகள் டிக்கெட் எடுக்க கவுன்ட்டர்களில் காத்திருக்காமல், மொபைல் போனில் எளிமையாக டிக்கெட் எடுத்து பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில், தொழில் நுட்பக் கோளாறு காரணமாக நேற்று காலை 8.25 மணி முதல் வாட்ஸ்-அப் செயலி வழியாக டிக்கெட் பெறும் வசதி தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. பிற ஆன்லைன் தளங்கள் மூலமாக, மெட்ரோ டிக்கெட்களைப் பெற மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவுறுத்தியது. இதைத்தொடர்ந்து பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை மற்றும் டிக்கெட் கவுன்ட்டர்களில் எந்த பாதிப்பும் இல்லாமல் டிக்கெட் எடுத்து பயணிகள் பயணித்தனர்.

அதே சமயம், தொழில் நுட்ப கோளாறு சரி செய்யும் பணியில் மெட்ரோ ரயில் நிறுவன பொறியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து, 4 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த கோளாறு பின்னர் சரி செய்யப்பட்டது. நேற்று நண்பகல் 12.50 மணிக்கு பிறகு, வாட்ஸ்அப் செயலி வழியாக டிக்கெட் பெறும் வசதி மீண்டும் தொடங்கியது.

x