அரசு ஊழியர் நன்னடத்தை விதிகள் திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும்: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கோரிக்கை


அரசு ஊழியர் நன்னடத்தை விதிகள் திருத்தத்தை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு வளாகங்களுக்குள் அறப் போராட்டம் நடத்துவதும், உண்ணாவிரதம் இருப்பதும், உரையாற்றுவதும் காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை.

இந்த ஜனநாயக உரிமையை சிதைக்கும் வகையில், அரசு அலுவலக வளாகங்களிலோ, அதையொட்டியோ அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஊர்வலம் செல்லக்கூடாது கூட்டம் நடத்தக்கூடாது, உரையாற்றக் கூடாது என தமிழக அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளில் புதிய திருத்தங்களை திமுக அரசு மேற்கொண்டுள்ளதாக வந்துள்ள தகவல், அர்ச்சியை அளிக்கிறது. இச்செயல் கடும் கண்டனத்துக்கு உரியது. திமுக எதிர்க்கட்சியாக செயல்பட்டபோது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடத்திய போராட்டங்களில், அந்த இடத்துக்கே சென்று ஆதரவுக் கரம் நீட்டியவர் தற்போதைய முதல்வர் ஸ்டாலின்.

இதுபோன்று ஆதரவுக் கரம் நீட்டி, அவர்களின் ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வந்தவுடன், அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாததுடன், அவர்களைப் போராடவே கூடாது என்று சொல்வது ஜனநாயக நடைமுறைக்கு எதிரானது. அடக்கு முறையின் வெளிப்பாடு. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு வளாகங்களில்தான் போராட முடியுமே தவிர, வேறு இடங்களில் போராட முடியாது.

இதுதான் காலம்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறை. இந்த முறையை மாற்றுவது என்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் உரிமையைப் பறிக்கும் செயலாகும். ஜனநாயகம் காக்கப்பட வேண்டுமென்ற எண்ணம் திமுக அரசுக்கு உண்மையாகவே இருக்குமானால், அண்மையில் தமிழ்நாடு அரசு ஊழியர் நன்னடத்தை விதிகளில் மேற்கொண்டுள்ள திருத்தங்களை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

x