மேட்டூர்: தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது சாத்தியமில்லை என பாமக மாநில பொருளாளார் திலகபாமா தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அடுத்த ராமன்நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமக சேலம் மேற்கு மாவட்டம் சார்பில் மகளிர் தின விழா நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான சதாசிவம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளார் திலகபாமா, முன்னாள் ஊராட்சி குழு தலைவர் ரேவதி ராஜசேகரன், மாநில மகளிர் அணி செயலாளர் தனலட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர், நிருபர்களிடம் பாமக மாநில பொருளாளர் திலகபாமா கூறியது: “தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது சாத்தியமில்லை. காவல் துறையை கைவசம் வைத்துள்ள முதல்வர் எந்தவித சிந்தனை இன்றி அமைதியாக இருக்கிறார். எந்த இடத்திலும் பெண்களுக்கு எதிராக வன்கொடுமை நடந்தால், பாமக மகளிரணி அனைத்து மகளிரை ஒருங்கிணைத்து தங்களுடைய குரலை எழுப்பும்.
கிராமங்களில் பெண்களின் ஒலிக்காத குரலை உரக்க ஒலிக்க பாமக உறுதிமொழி எடுத்துள்ளது. தமிழக முதல்வர் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை செய்பவர்களுக்கு தண்டனை வழங்கவும், தீர்வு காணவும் காவல் துறையை முடக்கி விட வேண்டும்.
பாலியல் வன்கொடுமைக்கு முக்கிய காரணமாக இருப்பது போதை பொருள் தான். மதுக்கடையை மூட வேண்டும் அளித்த தேர்தல் வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்ற வேண்டும். அப்பா என கூறும் முதல்வர், பிள்ளைகளுக்கு மது மற்றும் கஞ்சாவை விற்கலாமா?
பெண்களின் பாதுகாப்பிற்காக கொண்டு வந்த சட்டங்கள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. பாமக மாதர் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு தான், ஞானசேகரன் மீது குண்டாஸ் பதிவு செய்யப்பட்டது” என்று அவர் கூறினார்.