“தமிழகத்தில் குழந்தை முதல் பாட்டி வரை பாதுகாப்பு இல்லை!” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு


தமிழகத்தில் பச்சிளம் குழந்தை முதல் பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று பழநியில் நடிகை கவுதமி தெரிவித்தார்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழநியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், துணை பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் பேசுகையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நம்பி வாக்களித்த அரசு ஊழியர்களை முதுகில் குத்தி திமுக துரோகம் செய்து விட்டதாக புலம்பி வருகின்றனர்.

அமைதி பூங்காவான தமிழகம் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு அமளி பூங்காவாக உள்ளது. போதைப் பொருளின் சந்தைக் களமாக தமிழகம் மாறி உள்ளது. ஜெயலலிதாவை அனைவரும் பாசத்தில் அம்மா என்று அழைத்தனர். அதுபோல, ஸ்டாலின் தன்னை அப்பா என அழைக்க விளம்பரம் தேடுகிறார் என்றார்.

தொடர்ந்து, நடிகையும், கொள்கை பரப்பு துணை செயலாளருமான கவுதமி பேசியதாவது: அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும் முடக்கிவிட்டனர். ஸ்டாலின் ஆட்சியில் குழந்தை முதல் மூதாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். பச்சிளம் குழந்தை முதல் பாட்டி வரை யாருக்குமே இங்கு பாதுகாப்பில்லை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, தொழில் வசதி எதுவும் இல்லை.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துவிட்டது. பழநியை திருப்பதி போல் மாற்றி காட்டுவோம் என்றனர். ஆனால் முருகன் வாழும் பழநி மலையை சுற்றிலும் மலைபோல குப்பை குவிந்து கிடக்கிறது. மக்களிடம் மறுபடியும் வாக்கு கேட்க திமுக-வுக்கு தகுதி இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

x