தென்காசி - மேக்கரையில் விளைநிலங்களில் சேதப்படுத்தும் ஒற்றை யானை: தப்பி ஓடிய விவசாயி காயம்


தென்காசி: மேக்கரை பகுதியில் ஒற்றை யானை தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. காவலுக்கு சென்ற விவசாயி யானையை அருகில் பார்த்ததும் தப்பி ஒடியபோது கீழே விழுந்து காயமடைந்தார்.

தென்காசி மாவட்டம் மேக்கரையில் அடவிநயினார் அணை பாசனத்துக்கு உட்பட்ட மேட்டுக்கால் பகுதியில் விவசாயிகள் நெல் பயிர் சாகுபடி செய்துள்ளனர். நெல் பயிர்கள் இன்னும் அறுவடைக்கு தயாராகாத நிலையில், அணையில் நீர் குறைவாக இருப்பதால் முறை பாசனம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. பகலில் நேரடி பாசனத்துக்கும், இரவில் குளங்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

குளத்துக்கு திறக்கப்படும் தண்ணீரை நேரடி பாசனத்துக்கு திறக்காமல் இருக்க மடைகள் அருகில் இரவு நேரத்தில் விவசாயிகள் காவலுக்கு இருந்து வருகின்றனர். அதன்படி, நேற்று இரவிலும் விவசாயிகள் காவலுக்கு சென்றிருந்தனர். அவர்கள் மடைகளுக்கு அருகில் இருந்து கண்காணித்துக்கொண்டு இருந்தனர். இந்நிலையில், இரவில் மேட்டுக்கால் பாசன பகுதியில் புகுந்த காட்டு யானை, நெல் பயிர்களையும், வரப்புகளையும் மிதித்து சேதப்படுத்தயது. வடகரையைச் சேர்ந்த விவசாயி முகமது (48) என்பவர், இன்று அதிகாலையில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, விவசாய நிலத்துக்குள் புகுந்த யானை அருகில் வந்ததை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த முகமது அலறியடித்துக் கொண்டு ஓடியுள்ளார். அப்போது கால் தவறி சேற்றில் விழுந்து காயமடைந்தார். எழுந்திருக்க முடியாமல் அச்சத்தில் இருந்த அவர், மயங்கி கிடந்தார். இதைப் பார்த்த சக விவசாயிகள், யானை அங்கிருந்து சென்றதும் விரைந்து சென்று, காயமடைந்த விவசாயியை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, “மேட்டுக்கால் பாசன பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக ஒற்றை யானை பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது. இதுகுறித்து வனத்துறையினரிடம் பல முறை தெரிவித்தும் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வில்லை. இரவில் காவலுக்கு செல்லும் விவசாயிகள் பட்டாசுகளை வெடித்து யானையை விரட்ட முயன்றாலும் எதிர்த்து விரட்டுகிறது. காவலுக்கு சென்ற விவசாயி முகமது யானையை பார்த்ததும் தப்பி ஓடும்போது கீழே விழுந்து மயக்கமடைந்தார்.

அதற்கு முன்தினம் குளத்துக்கு தண்ணீர் செல்கிறதா என பார்க்கச் சென்ற விவசாயிகள் குளத்தில் யானை நிற்பதை பார்த்ததும் தப்பி ஓடி உயிர் பிழைத்தனர். விவசாய நிலத்தில் சுற்றித் திரியும் ஒற்றை யானையால் உயிருக்கு பாதுகாப் பற்ற நிலையில் விவசாயிகள் உள்ளனர். தொடர்ந்து வனப்பகுதிக்குள் செல்லாமல் பயிர்களை சேதப்படுத்தும் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, வேறு இடத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும்” என்றனர்.

x