கடலூர்: கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் கடலூரில் சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு பெண்களுக்காக விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்ட பந்தயம் இன்று (மார்ச் 8) காலை நடைபெற்றது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.
கடலூர் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் அனு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கொடியசைத்து ஓட்டப் பந்தயத்தை துவக்கி வைத்தார். இதில் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பேசுகையில், “காவல் துறை சார்பில் மகளிர் தின வாழ்த்துக்கள். மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பெண்களுக்கான காவல் உதவி எண் 181 மற்றும் காவலன் செயலி பனியனில் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் அனு பேசுகையில், “மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் காவல்துறை சார்பில் இந்த விழிப்புணர்வு நெடுந்த ஓட்ட பந்தயம் நடத்தப்படுகிறது. படிக்கும் கல்லூரி காலத்தில் திறமைகளை வளர்த்து கொண்டு தன்னம்பிக்கையோடு சாதனை பெண்களாக திகழ வேண்டும்” என வாழ்த்து பேசினார்.
நெடுந்தூர ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பெற்ற யாழினி, இரண்டாமிடம் பெற்ற கீர்த்திகா, மூன்றாமிடம் பெற்ற தேவி ஆகியோர்களுக்கு பாராட்டு சான்றிதழ், பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது நெடுந்தூர ஓட்டப் பந்தயத்தில் கடலூர் மாவட்ட பெண் காவலர்கள், கந்தசாமி மகளிர் கல்லூரி, புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இமாகுலேட் மகளிர் கல்லூரி, பெரியார் அரசு கலை கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நல்லதுரை, துணை காவல் கண்காணிப்பாளர்கள் பார்த்தீபன், அப்பாண்டை ராஜ், காவல் ஆய்வாளர்கள் கவிதா, ரேவதி மற்றும் பெண் காவலர்கள் பங்கேற்றனர்.