திருப்பத்தூர்: திமுக ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் கோ-ஆப்டெக்ஸ் லாபத்தில் இயங்கி வருவதாக கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
திருப்பத்தூரில் நவீனப்படுத்தப்பட்ட புதிய கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர் நகர் பகுதியில் உள்ள கச்சேரி சாலையில் 1,000 சதுர அடியில் குளிர் சாதன வசதியுடன் நவீனப்படுத்தப்பட்ட புதிய கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சிவசெளந்தர வல்லி தலைமை வகித்தார். கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப் முன்னிலை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேவராஜி (ஜோலார்பேட்டை), நல்ல தம்பி (திருப்பத்தூர்), வில்வநாதன் (ஆம்பூர்), திருப்பத்தூர் நகராட்சி மன்றத் தலைவர் சங்கீதா வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தை திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, ”தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் 150 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 106 கோ-ஆப்டெக்ஸ் நிலையம் தமிழகத்திலும், மீதமுள்ள 44 கோ-ஆப்டெக்ஸ் நிலையங்கள் பிற மாநிலத்திலும் திறக்கப்பட்டுள்ளன. இத்துறை நஷ்டத்தில் இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டுக்குள் இந்த துறை லாபம் ஈட்டியது.
மேலும் ஆலோசகர்கள் வைத்து, பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கி விற்பனை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து இரட்டிப்பு லாபம் கிடைத்தது. நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த சம்பள உயர்வு நிறைவேற்றப்பட்டு, தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்து விற்பனை உயர்த்தப் பட்டது.
தற்போது, கோ-ஆப்டெக்ஸ் நிலையத்தில் 20 சதவீதம் தள்ளுபடி விலையில் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மகளிர் தினத்தன்று மேலும் 10 சதவீதம் உயர்த்தி 30 சதவீதம் தள்ளுபடி விலையில் தமிழ்நாடு முழுவதும் விற்பனை மேற்கொள்ளப்படவுள்ளன.
கோ-ஆப்டெக்ஸ் விற்பனை மேற்கொள்ளும் பட்டு சேலைகளில், வெள்ளி மற்றும் தங்க சரிகை அதிகமாக இணைக்கப் படுகின்றன. தங்க விலை, வெள்ளி விலை உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அந்த சேலையை 2, 3 ஆண்டுகள் கழித்து விற்பனை செய்யும்போது அதிகமான தொகைக்கு விற்பனை ஆகும்” என்றார்.
திருப்பத்தூரில் நவீனப் படுத்தப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் பட்டு சேலைகள், கோரா காட்டன் சேலைகள், செட்டிநாடு காட்டன் சேலைகள், செடி புட்டா காட்டன் சேலைகள், ஹாட் சில்க் சேலைகள், போர்வை ரகங்கள், படுக்கை விரிப்புகள், காட்டன் வேட்டிகள் மற்றும் லுங்கிகள், டவல், கார்ப்பெட் ரகங்கள், ஜன்னல் திரை சீலைகள், தலையணை உரைகள், பெண்களுக்கான குர்தீஸ் காட்டன் ரகங்கள் உள்ளிட்ட விதவிதமான துணி வகைகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளதாகவும், மார்ச் 27ம் தேதி வரை 2 வாங்கினால் ஒன்று இலவசம் என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படும் என கோ- ஆப்டெக்ஸ் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.