திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட 4-வது புத்தகத் திருவிழாவை இன்று அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சா.மு.நாசர் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.
பொதுநூலகத்துறை மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் திருவள்ளூர் மாவட்ட 4-வது புத்தகத் திருவிழா, நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, இன்று காலை திருவள்ளூர் சி.வி.என் சாலை மைதானத்தில் பள்ளி மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சிகளுடன் புத்தக காட்சி தொடங்கியது.
இதனை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிறுபான்மையினர் நலம், வெளிநாட்டு வாழ் தமிழர் நலம் துறை அமைச்சர் சா.மு.நாசர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து, அரங்குகளை பார்வையிட்டனர். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் மு பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், எம்.எல்.ஏ.,க்கள் வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, டி.ஜே.கோவிந்தராஜன், துரைசந்திரசேகர், முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், திருவள்ளூர் நகர மன்ற தலைவர் உதய மலர் பாண்டியன் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த புத்தகத் திருவிழா வரும் 17-ம் தேதி வரை நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த புத்தகத் திருவிழா 108 அரங்குகளில் 50 ஆயிரம் தலைப்புகளில், இலக்கியம், மருத்துவம், அரசியல் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறை நூல்கள் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் என பல லட்சம் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த புத்தகங்கள் 10 சதவீத தள்ளுபடி விலையில் வழங்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் நாள்தோறும் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் எழுத்தாளர்கள், பேச்சாளர்களின் சொற்பொழிவுகள் போட்டிகள் நடைபெற உள்ளன.