காட்டிக்கொடுத்தவன் நீ, உனக்கு வெட்கமாயில்லையா? - மாஃபா பாண்டியராஜனை விளாசிய ராஜேந்திர பாலாஜி! 


விருதுநகர்: அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை பகிரங்கமாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளது பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

சிவகாசியில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “ அதிமுகவில் நான் ஒரு குறுநில மன்னர்தான். எனக்கு பின்னால் உள்ள அதிமுக தொண்டர்கள் வாள் ஏந்திய படை வீரர்கள் போல உள்ளனர். நீ செய்வதெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்க நான் கிறுக்கனோ, பைத்தியக்காரனோ அல்ல. தொலைத்துவிடுவேன்.
என்னை பற்றி பேச வேண்டும் என்றால் விருதுநகரில் வைத்து பேச வேண்டும்.! சென்னையில் சென்று ஏன் பேசுகிறார் மாஃபா பாண்டியராஜன். வெற்றி வந்தாலும் தோல்வி வந்தாலும் அதிமுக இயக்கத்தில்தான் இருப்பேன்.

கட்சியை காட்டிக்கொடுத்தவர் மாஃபா பாண்டியராஜன். எனக்கு வரலாறு உள்ளது. உனக்கு என்ன வரலாறு இருக்கு?. நான் எம்ஜிஆர், புரட்சி தலைவியின் தொண்டன். எனக்கு உடம்பில் அதிமுக ரத்தம் ஓடுகிறது. உனக்கு எந்த ரத்தம் ஓடுகிறது. முதலில் காங்கிரஸ், பிறகு தமாகா, பிறகு பாஜக, பிறகு தேமுதிக, அப்புறம் அதிமுக, அப்புறம் ஓபிஎஸ், அப்புறம் அதிமுக. உனக்கு வெட்கமாயில்லையா?. நீ என்கூட போட்டி போடுகிறாயா?. இயக்கத்தை காட்டிக்கொடுத்துவிட்டு ஓடியவன் நீ. ஒரு வழக்கு வந்தால் நீ கட்சியை விட்டு ஓடிவிடுவாய். என் மீது எத்தனை எத்தனை வழக்கு போட்டு மிரட்டினாலும் எடப்பாடியார் பக்கம்தான் நிற்பேன். அவர் எல்லோரையில் அரவணைத்து செல்லவேண்டும் என்கிறார். அதனால்தான் பலரையும் ஏற்றுக்கொள்கிறோம்.

விருதுநகர் மாவட்ட அதிமுகவில் என்னை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது. அதிமுகவை வாழவைக்க எந்த நிலைக்கும் நான் செல்வேன். எடப்பாடிக்கு எதிராக யார் வந்தாலும் அரிவாள், துப்பாக்கி ஏந்தி நிற்பேன்; உன்னால் முடியுமா? மாவட்டச் செயலாளரான நான் இருக்கும் போது மாஃபா பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்தால் விட்டுவிடுவேனா? பல கட்சிக்கு சென்றுவிட்டு வந்த மாஃபா பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்ததால் நிர்வாகி கன்னத்தில் அறைந்தேன். அதிமுகவுக்கு உண்மையாக உழைப்பவருக்கே மரியாதை கொடுப்பேன். அதிமுக தொண்டன் மீது பொய் வழக்கு போட்டால் காவல்துறையை கூட விடமாட்டேன். விருதுநகர் எம்.பி தொகுதியில் அம்மாவின் நம்பிக்கையை பெற்று வென்று கொடுத்தவன் நான். அம்மா என்னை பாராட்டினார். உனக்கு என்னடா தகுதி இருக்கு. நீ நல்ல ஆம்பளயா இருந்தா விருதுநகரில் நின்றிருக்கணும், ஏன் சென்னைக்கு ஓடினாய்” என்று கூறினார்.

x