வந்தாச்சு ‘வம்பன் 12’ ரக உளுந்து - வறட்சியை தாங்கி வளரும், மகசூலும் அள்ளித் தரும்!


புதுக்கோட்டை: வம்பன் தேசிய பயறு வகை ஆராய்ச்சி நிலையம் சார்பில் உயர் விளைச்சலுக்கு ஏற்ற ‘வம்பன் 12’ ரக உளுந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வம்பனில் சுமார் 250 ஏக்கரில் தேசிய பயறுவகை ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, மானாவாரி மற்றும் குறைந்த வளமான மண்ணுக்கு ஏற்ற பாசிப்பயறு, உளுந்து, துவரை, தட்டைப்பயறு போன்ற பயறுவகை பயிர்கள் குறித்து ஆராய்ச்சி செய்து புதிய ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, உளுந்தில் ‘வம்பன் 12’ எனும் புதிய ரகம் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டு, அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ரகங்களை விட, இந்த ரகத்தில் உற்பத்தித் திறன், நோய் எதிர்ப்பு திறன் போன்றவை அதிகம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து 'இந்து தமிழ் திசை' நாளிதழியிடம் வம்பன் தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையத்தின் இது குறித்து மையத்தின் தலைவர் ஆ.யுவ ராஜா கூறியதாவது: தமிழகத்தில் பயறுவகை பயிர்களின் உளுந்து முதன்மை இடம் வகிக்கிறது. நமது உணவில் முக்கியப் பங்கு வகிக்கும் பயறு வகைகளில் இருந்து தான் நமக்குத் தேவையான புரதம் கிடைக்கிறது. மண் வளத்துக்கும் பயறு வகை சாகுபடி முக்கியம். சிறு விவசாயிகளாலும், வளமற்ற மானாவாரியிலும், பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன. ஆனால், தானியப் பயிர்களைவிடப் பயறு வகைகளில் கிடைக்கும் லாபம் அதிகம். இதற்கு குறைந்த நீர் போதுமானது. மேலும், குறுகிய காலத்தில் அதிக லாபம் பெற்றுத் தரக்கூடிய பயிராகும்.

ஆ.யுவராஜா

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘வம்பன் 12’ எனும் உளுந்து ரகமானது ஆடி, புரட்டாசி மற்றும் சித்திரைப்பட்ட விதைப்புக்கு ஏற்றது. ஒளி உணர்வு திறனுடையது. மஞ்சள் தேமல், இலை நெளிப்பு, சாம்பல் நோய் எதிர்ப்புத்திறன் கொண்டது. ஒவ்வொரு காயும் 5.5 செ.மீட்டர் முதல் 6 செ.மீட்டர் நீளத்தில் இருக்கும். தோல் நீக்குவது எளிமையானது. ஒவ்வொரு காயிலும் 6-ல் இருந்து 8 விதைகள் இருக்கும். ஒரு செடியில் 60 முதல் 80 காய்கள் காய்க்கும். அதிகபட்சம் ஏக்கருக்கு 950 கிலோ விளைச்சல் கிடைக்கும்.

இதற்கு முந்திய ரகங்களைவிட இந்த ரகத்தை விவசாயிகள் தேர்வு செய்து பயிரிடலாம். ஓரளவுக்கு வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. இதற்கு முன்பு வம்பன் தேசிய பயறுவகை ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் உளுந்து ரகத்தில் வம்பன் 1 முதல் 11 வரையிலும், பாசிப்பயறில் வம்பன் 1-7 வரையிலும், தட்டைப்பயறில் 1-4 வரையிலும், துவரையில் 1-3 வரையிலும் ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

x