ராணிப்பேட்டை: அமித்ஷாவுக்கு பதில் சந்தான பாரதி புகைப்படத்துடன் அச்சடிக்கப்பட்ட அந்த போஸ்டருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; அதை நான் ஒட்டவில்லை. என் பெயரை மிஸ் யூஸ் செய்துள்ளனர் என பாஜக செயற்குழு உறுப்பினர் அருள்மொழி தெரிவித்துள்ளார்
இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வந்துள்ளார். இந்த நிலையில் சிஐஎஸ்எஃப் எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் 56வது ஆண்டு விழா ராணிப்பேட்டை அருகே அரக்கோணத்தில் உள்ள மண்டல பயிற்சி மையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்றுள்ளார்.
இந்த விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா, “பிரதமர் மோடி தமிழுக்கும் அதன் பாரம்பரியத்திற்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறார். பிரதமர் மோடி வந்த பின்னரே சிஐஎஸ்எஃப் தேர்வு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத முடிகிறது” எனப் பேசினார்.
அமித்ஷாவின் ராணிப்பேட்டை வருகையை பாஜகவினர் போஸ்டர்கள், பிளக்ஸ்கள் வைத்து வரவேற்றனர். இதில் அமித்ஷாவுக்கு பதில் நடிகர் சந்தான பாரதி புகைப்படத்தை போட்டு ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போஸ்டரில், ‘ ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வருகைதரும் இந்தியாவின் இரும்புமனிதரே! வாழும் வரலாறே! வருக வருக’ வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த போஸ்டரை பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் அருள்மொழி அச்சடித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள அருள்மொழி, “அந்த போஸ்டருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; அதை நான் ஒட்டவில்லை. என் பெயரை மிஸ் யூஸ் செய்துள்ளனர். இதனால் நான் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். இதுகுறித்து காவல்துறையை அணுகி புகாரளிக்க உள்ளேன்” என்று கூறியுள்ளார்