மேட்டூர்: மேட்டூர் சிட்கோவில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த காயமடைந்த இருவருக்கு தனியார் மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேட்டூர் அருகே கருமலைக்கூடலில் சிட்கோ தொழிற்பேட்டையில் 200-க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில் கருமலைக்கூடலை சேர்ந்த செம்பன்(75) என்பவருக்கு சொந்தமான கெமிக்கல்ஸ் சிறு குறு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் மக்னீசியம் சல்பேட் என்ற ரசாயனம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில் நேற்றிரவு 11 மணியளவில் ரசாயன தொட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து கருமலைகூட தீயணைப்பு நிலையத்திற்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அழைத்தனர். இதனால் அருகில் உள்ள மற்ற தொழிற்சாலைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
இந்த தீ விபத்தின் போது பணியில் இருந்த பெரியசோரகை சேர்ந்த ராஜா கவுண்டர் ( 56), கோம்புரான்காடு பகுதியை சேர்ந்த முருகன்(54) ஆகிய 2 தொழிலாளர்கள் பலத்த காயம் அடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் தீயணைப்பு துறையினர் மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் உயர் சிகிச்சைக்காக சேலத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும், தீ பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் தீ தடுப்பு உபகரண வசதிகள் உள்ளதா என்பது குறித்து போலீஸார், தீயணைப்பு துறையினர் தொழிற்சாலை உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக கருமலைக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.