கிருஷ்ணகிரி: வனத்துறை-மலைக் கிராம மக்களுக்கு இடையே மோதல் போக்கு இருப்பதால், அஞ்செட்டி வனப்பகுதியில் மர்ம நபர்கள் தீ வைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத் தடுக்க உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டம் 1,492 ச.கி.மீ பரப்பளவில் உள்ளது. இதில், 29 சதவீதம் வனப்பகுதியாக உள்ளது. இங்கு அரிய வகை தாவரங்கள், மரங்கள் மற்றும் வனவிலங்குகள், பறவைகள் உள்ளன. இந்நிலையில், யானைகள் முதல் சிறிய வகை வன உயிரினங்கள் வரை வனத்தில் உள்ள ஈரப்பதத்தை நம்பி வாழ்ந்து வருகின்றன. இதனால், இப்பகுதியில் வாழும் வன உயிரினங்களைப் பாதுகாக்கும் வகையில் இந்த வனப்பகுதியைக் கடந்த 2014ம் ஆண்டு வடக்கு வன உயிரின சரணாலயமாகவும், 2022ம் ஆண்டு காவிரி தெற்கு வன உயிரின சரணாலயமுமாக வும் அரசு அறிவித்தது.
இதையடுத்து, இந்த வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்கள் மற்றும் வனத்தில் புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கவும், வனப்பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு வனத்துக்குக் கொண்டு செல்லவும் தடை விதிக்கப் பட்டுள்ளது. இத்தடையால் வனத்துறையினருக்கும், மலைக் கிராம மக்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. இம்மோதல் போக்கால், வனத்துறையினர் மீது கோபத்தில் உள்ள மர்ம நபர்கள் வனத்தில் நிலவும் வறட்சியைப் பயன்படுத்தி செடிகளுக்கு தீ வைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக வன உயிரின ஆர்வலர்கள் கூறியதாவது: ஓசூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட அஞ்செட்டி, தேன்கனிக் கோட்டை, உரிகம் ஆகிய வனச் சரகங்களையொட்டி சுமார் 500-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்கள் பல தலைமுறைகளாக வீடுகள் கட்டியும், விவசாயம் செய்தும், கால்நடைகள் வளர்ப்புத் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வனமே தங்களது உலகம் என இருந்த நிலையில், வன உயிரின சரணாலயம் அறிவிப்பால், விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதை மனதில் வைத்துக் கொண்டு மர்ம நபர்கள் சிலர் வனப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தீ வைக்கின்றனர். அஞ்செட்டி வனப் பகுதியில் தற்போது, பல்வேறு இடங்களில் காட்டுத்தீ பரவி வருகிறது. மூங்கில் மரங்கள் உரசி ஏற்படும் தீ விபத்தை விட, மனிதர்களால் அதிகம் காட்டுத்தீ ஏற்படுகிறது. இதைத் தடுக்க மலைக் கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வனத்துறையினர், மலைக் கிராம மக்களிடம் நட்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தீ வைத்தால் நடவடிக்கை: வனத்துறை எச்சரிக்கை
வனத்துறையினர் கூறும் போது, வன உயிரின சரணாலயம் அறிவிப்புக்கு முன்னர் மலைக் கிராம மக்கள் வனப் பகுதியில் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தனர். மேலும், கால்நடைகளை வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டு வந்தனர். தற்போது, வன உயிரின சரணாலயம் அறிவிப்புக்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளால், கிராம மக்கள் எங்களிடம் அடிக்கடி தகராறு செய்து வருகின்றனர். வனத்தையும், வன உயிரினங்களையும் பாதுகாப்பதே எங்களுக்கு முக்கியம்.
இதனால், எங்கள் மீது உள்ள கோபத்தால் சிலர் வனப்பகுதியில் காய்ந்துள்ள செடிகளுக்கு தீ வைத்துவிட்டுச் செல் கின்றனர். தற்போது வறட்சி நிலவுவதால், காட்டுத்தீயாக மாறிவருகிறது. இக்குற்றங்களில் ஈடுபடுவோரைக் கண்டறிந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இதுதொடர்பாக கிராமங்களுக்குச் சென்று மக்களிடம் துண்டுப் பிரசுரங்கள், ஒலி பெருக்கி மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.