3 ஆண்டுகளுக்கும் மேலாக டெண்டர் இல்லை: மதுரை மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு அதிகரிப்பு


மதுரை: மாநகராட்சியில் 40 முக்கிய வருவாய் இனங்கள், கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக ‘டெண்டர்’ விடப்படாமல் மாநகராட்சியே எடுத்து நடத்தி வருகிறது. ஆளும்கட்சி, எதிர்கட்சிகள் பின்னணியில் டெண்டர் தாரர்கள் ‘சிண்டிகேட்’ அமைத்து புறக்கணிப்பதால் மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் வருவாய் இழப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சிக்கு வரி வருவாய், வரியில்லா வருவாய் இனங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.480 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது. வரியில்லாத வருவாய் இனங்களை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை டெண்டர் விட வேண்டும். ஆனால், டெண்டர் தேதி முடிந்தும், கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக டெண்டர் விடப்படாத வருவாய் இனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும், அதனை ஏலம் விடாததால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த காலத்தில் ஆணையர்களாக கார்த்திகேயன், மதுபாலன், தினேஷ்குமார் ஆகியோர் இருந்தபோது, டெண்டரில் ஏலதாரர்களின் ‘சிண்டிகேட்’ டை தடுக்க அரசியல் கட்சிகள் எதிர்ப்பையும் மீறி நியாயமாக டெண்டர் விட்டு மாநகராட்சிக்கு வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால், ஏலதாரர்கள் ‘சிண்டிகேட்’ புறக்கணிப்பால் அவர்களால் ஏலம் விட முடியவில்லை. ஆணையராக இருந்த தினேஷ்குமார், ஒரு படி மேலாகச் சென்று மாநகராட்சி ‘ஆன்லைன்’ டெண்டர் முறையை அறிமுகம் செய்து முக்கிய வருவாய் இனங்களை டெண்டர் விடுவதற்கு அறிவிப்பு வெளியிட்டார்.

ஆனால் இதற்கு உள்ளூர் ஆளும்கட்சி, எதிர்கட்சிகள் பின்னணியில் ஏலதாரர்கள், ‘ஆன்லைன்’ டெண்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘சிண்டிகேட்’ அமைத்து டெண்டரை புறக்கணிக்க செய்தனர். அதனால், தற்போது வரை சுமார் 40 முக்கிய வருவாய் இனங்கள் டெண்டர் விடப்படாமல் மாநகராட்சியே எடுத்து நடத்தி வருகிறது. மாநகராட்சியில் ஏற்கெனவே ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளதால், டெண்டர் விடப்படாத இந்த வருவாய் இனங்களின் அன்றாட வசூலை கண்காணிக்க முடியவில்லை. அதனால், மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் கிடைக்க வேண்டிய வருவாய் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி வருவாய் பிரிவு ஊழியர்கள் கூறியதாவது: மாநகராட்சிக்கு சொத்துவரி, கடைகள் வாடகை, டெண்டர் விடப்படும் வருவாய் இனங்கள் உட்பட பல்வேறு வருவாய் இனங்கள், மானிய நிதி, கடன் தொகை உள்ளிட்டவை மூலம் கடந்த 2024-25-ம் ஆண்டு மட்டும் ரூ.1,296.06 கோடி வருவாய் கிடைப்பதாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் திட்டமிட்டபடி, டெண்டர் விடப்படும் வருவாய் இனங்கள் மூலம் கிடைக்க வேண்டிய வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதால் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மாட்டுத்தாவணி இருசக்கர வாகன காப்பகம், மாட்டுத்தாவணி காய்கறி மற்றும் பழ மார்க்கெட் நுழைவுக் கட்டணம், தெற்குவாசல் சாலையோர காய்கறி மார்க்கெட் கடைகள், தெற்குவாசல் மீன் மார்க்கெட், மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட் நுழைவு கட்டணம், வாரச்சந்தைகள், ஆரப்பாளையம் இருசக்கர வாகனம், கோச்சடை லாரி ஸ்டாண்ட், தெற்குவாசல் காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட 40 வருவாய் இனங்கள் கடந்த ஓராண்டுக்கு மேலாக டெண்டர் விடப்படவில்லை என்றனர்.

மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ”டெண்டர் விடுவதற்கு மாநகராட்சியும் இதுவரை 3 முறை அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், யாரும் டெண்டரில் பங்கேற்க முன்வரவில்லை. அதனால், இந்த வருவாய் இனங்களை டெண்டர் விட முடியவில்லை. தற்போது வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடையும் மேலும் 16 வருவாய் இனங்களையும் சேர்த்த 46 வருவாய் இனங்களுக்கும் மறு டெண்டர் வைப்பதற்கு ஆணையர் பார்வைக்கு கோப்புகளை அனுப்பியுள்ளோம்” என்றார்.

x