திருப்பூர்: காங்கயம் அருகே சிவன்மலை ஊராட்சியில் புகழ்பெற்ற சிவன்மலை முருகன் மலைக் கோயில் உள்ளது. மற்ற கோயில்களில் இல்லாத வகையில், இந்தக் கோயிலில் ஆண்டவன் உத்தரவு என்ற சிறப்பம்சம் உள்ளது.
ஒரு பக்தரின் கனவில் சிவன்மலை முருகக்கடவுள் வந்து, இன்ன பொருளை மூலவர் அறைக்கு முன்பாக உள்ள ஆண்டவன் உத்தரவுப் பெட்டியில் வைத்து பக்தர்கள் வழிபடுமாறு உத்தரவிடுவதாக பக்தர்களிடையே நம்பிக்கை நிலவுகிறது. இதுவே ஆண்டவன் உத்தரவு என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே ஆறுதொழுவு பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்ற பக்தரின் கனவில் வந்ததாக, நேற்று கற்பூரம், பிரம்பு வைத்து பூஜை செய்யப்பட்டு, ஆண்டவன் உத்தரவுப் பெட்டிக்குள் வைக்கப்பட்டது.
கடந்த 25-ம் தேதி வைக்கோல் வைத்து பூஜை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்னொரு பக்தரின் கனவில், அடுத்த பூஜைப் பொருள் வரும் வரை ஆண்டவன் உத்தரவுப் பெட்டிக்குள் கற்பூரம், பிரம்பு பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் எந்த பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறதோ அந்த பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது கற்பூரம், பிரம்பு வைத்து பூஜை செய்யப்படுகிறது. இதன் தாக்கம் போகப்போகத் தான் தெரியும் என பக்தர்கள் தெரிவித்துள்ளனர்