திருச்சி: ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை - மயிலாடுதுறை இடையே ஜனசதாப்தி ரயில் குறிப்பிட்ட நாட்களுக்கு திருச்சி வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி - பொன்மலை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பொறியியல் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதனால் கோவை-மயிலாடுதுறை இடையே இயக்கப்படும் ஜனசதாப்தி ரயில் பகுதியளவு இயக்கப்பட உள்ளது.
கோவை - மயிலாடுதுறை ஜனசதாப்தி விரைவு ரயில் (வண்டி எண் 12084) மார்ச் 8, 13 மற்றும், 15 ஆகிய தேதிகளில் கோவையில் இருந்து திருச்சி ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்பட உள்ளது. மேற்கண்ட நாட்களில் இந்த ரயில் மயிலாடுதுறை செல்லாது.
மறுமார்க்கத்தில் மயிலாடுதுறை - கோவை விரைவு ரயில் (வண்டி எண் 12083) மார்ச் 8, 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து புறப்பட்டு கோவை வந்தடையும். மேற்கண்ட நாட்களில் மயிலாடுதுறை- திருச்சி இடையே ரயில் இயக்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.