8 குடும்பங்களை ஊரைவிட்டு விலக்கி வைத்த விவகாரம்: தென்காசி கலெக்டருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்


சாம்பவர்வடகரை பகுதியில் 8 குடும்பங்களை ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் ஊரை விட்டு விலக்கிவைத்த விவகாரத்தை, தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. மேலும், இது தொடர்பாக 2 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பகுதியில் ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில், குடும்பங்களை ஊரை விட்டு சிலர் விலக்கி வைப்பதாக கடந்த சில ஆண்டுகளாகவே குற்றச்சாட்டுகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்குமுன் இதே கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரை இடப் பிரச்சினை காரணமாக ஊரை விட்டு விலக்கி வைத்து, ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அவரிடம் பேசிய நபரையும் ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல, கலப்பு திருமணம் செய்த குடும்பத்தையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தனர்.

அண்மையில், ஊர் நாட்டாமை வெங்கடேஷ் என்பவர், 8 குடும்பங்களை ஊரை விட்டு விலக்கிவைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வாறு ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததால் தங்களுடன் ஊர் மக்கள் பேசுவதற்கு அஞ்சுகின்றனர் என்றும், கடைகளில் பொருட்களை வாங்க முடியவில்லை என்றும் கூறி, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து, தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த மாதம் 20-ம் தேதி குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உரிய அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பான செய்தி பத்திரிகைகளில் வெளியானது. இந்த செய்திகளை அடிப்படையாக கொண்டு, இந்த விவகாரத்தை தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக 2 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோருக்கு, தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

x