புதுச்சேரி மத்திய பல்கலை. துணைவேந்தராக ஹைதராபாத் பேராசிரியர் நியமனம்


புதுச்சேரி மத்திய பல்கலை. துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் பனித்தி பிரகாஷ்பாபு

புதுச்சேரி: ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக பனித்தி பிரகாஷ்பாபு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஹைதராபாத் பல்கலைக்கழக மூத்த பேராசிரியராக இருக்கிறார்.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக துணை வேந்தராக பேராசிரியர் குர்மீத் சிங், 2017-ம் ஆண்டு நவ. 29-ம் தேதி பொறுப்பேற்றார். 2022-ம்ஆண்டு நவ.23-ம் தேதி இவரது பதவிக்காலம் நிறைவடைந்தது. புதிய துணைவேந்தரை நியமிக்க புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் செயற்குழுவில் உள்ள இருவரின் பெயர்களை பரிந்துரைக்க மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியது. இச்சூழலில் குர்மீத்சிங்கின் பதவிக்காலத்தை ஓராண்டுக்கு நீட்டித்து, மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டது.

இக்காலத்தில் மத்தியப் பல்கலைக்கழகத்தின் தரவரிசை கடுமையாக சரிந்தது. மேலும் பலவித குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்குகளும் தொடரப்பட்டன. இதனால் பணிநீட்டிப்பு தரப்படாமல் கடந்த 2023 நவம்பரில் பணி ஓய்வு பெற்றுச் சென்றார். அவர் தங்கியிருந்த பங்களாவை காலி செய்யாமல் இருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை பேராசிரியரும், கல்விப் பிரிவின் இயக்குநருமான தரணிக்கரசு துணைவேந்தர் பொறுப்பைகவனித்து வந்தார்.

இந்தநிலையில், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக துணை வேந்தராக, ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் உயிரித் தொழில்நுட்பம் மற்றும் உயிரித் தகவலியல் துறை முதுநிலை பேராசிரியரான பனித்தி பிரகாஷ்பாபு நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவை, மத்திய அரசின் கல்வித்துறை இயக்குநர் சுபாஷ்சந்த் ஷாரு பிறப்பித்துள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர் ஐந்து ஆண்டுகள் அல்லது 70 வயது வரையில் இப்பொறுப்பில் இருக்கலாம்.

சுமார் ஒன்றரை ஆண்டுகளாக பொறுப்பு துணைவேந்தர் கண்காணிப்பில் பல்கலைக்கழகம் இயங்கியது. புதுச்சேரி பல்கலைக்கழக ஆசிரியர் அல்லாத ஊழிய நலச்சங்கத்தினர் புதிய துணைவேந்தரை நியமிக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதைத் தொடர்ந்து தற்போது துணைவேந்தர் நியமிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தினர் கருத்து தெரிவித்தனர்.

x