“அதிமுக வாக்கு வங்கி என்பது வங்கி டெபாசிட் வைப்பு தொகை போன்றது” - ஆர்.பி.உதயகுமார் பெருமிதம் 


மதுரை: அதிமுக வாக்கு வங்கி என்பது வங்கியில் டெபாசிட் செய்த வைப்பு தொகை போன்றது என்று சட்ட சபை எதிர்கட்சித் துணைத்தலைவர் ஆர்பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மதுரையில் கூறியதாவது: ''தமிழ்நாட்டிலே நடைபெற்று வருகிற திமுக மக்கள் விரோத அரசு, இன்றைக்கு அனைத்து நிலைகளிலும் தோல்வியுற்றிருக்கிறது. தற்போது மதுரையில் நடைபெற்ற மூன்று வார அதிமுக திண்ணைப் பிரச்சாரம் மக்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பு நம்பிக்கை பெற்றுள்ளது. தமிழக அரசு ஜீவாதார உரிமையில் தோல்வி அடைந்துள்ளது, 39 மக்களவை உறுப்பினர்களின் அதிகாரம் இருந்தும் காவிரி, கச்ச தீவு, முல்லை பெரியாறு உரிமைகளில் அரசு தோல்வி அடைந்துள்ளது.

விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. அதிமுக ஆட்சியில் ஒரு கிலோ அரிசி ஒரு கிலோ அரிசி 40 ரூபாய்க்கு விற்றது, தற்போது ஸ்டாலின் ஆட்சியில் 70 ரூபாய்க்கு விற்கின்றது. கடலை எண்ணெய் ஒரு கிலோ 130 ரூபாய், ஸ்டாலின் ஆட்சியில் ஒரு கிலோ 300 ரூபாய். துவரம் பருப்பு 74 ரூபாய், தற்போது 140 ரூபாய், உளுந்தம் பருப்பு ஒரு கிலோ 75 ரூபாய், தற்போது 140 ரூபாய், பூண்டு ஒரு கிலோ 110 ரூபாய், தற்போது 550 ரூபாய், பால் ஒரு லிட்டர் 30 ரூபாய், தற்போது 50 ரூபாய் விற்கப்படுகிறது.

அதனால், அடித்தட்டு, நடுத்தர மக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். மின்சார கட்டணம் 52 சதவீதம் உயர்ந்து ஆண்டுதோறும் ஆறு சதவீத கட்டணம் உயர்த்தப்படும் என்ற நிலை உள்ளது. 150 சதவீத சொத்து வரி உயர்வு, ஆண்டுதோறும் 6 சகவீத உயர்வு, இப்படி மக்களின் தலையிலே மிகப்பெரிய சுமைகளை சுமத்தியுள்ளது இந்த ஸ்டாலின் திமுக அரசு. அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு மக்களிடத்தில் வரவேற்பு பெற்ற அதிமுக அரசின் தாலிக்கு தங்கம் திட்டம், மடிக்கணினி திட்டம், இருசக்கரவாகன திட்டம் தற்போது ரத்து செய்துள்ளனர்.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டங்கள் மீண்டும் நிறைவேற்றப்படும். மக்களிடத்தில் செல்வாக்கு பெற்றுள்ள அதிமுக மீது பல்வேறு அவதூறுகளையும், கட்டுக்கதைகளையும், புரளிகளையும் திமுகவினர் பரப்பி வருகின்றனர். ஆனால், அதிமுகவின் செல்வாக்கு என்பது வங்கியிலே நாம் செலுத்தி இருக்கிற நிரந்தர வைப்புத் தொகை போன்றது.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

x