திருவள்ளூர்: பட்டரைபெரும்புதூர் முருகன் கோயில் சுரங்க நிலவரையில் இறங்கி தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பணிக்காக சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த மாதம் 17-ம் தேதி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், திருவள்ளூர் அருகே பட்டரைபெரும்புதூர் கிராமத்தில் உள்ள 9, 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலை சாலை பணிக்காக அகற்ற முயன்றனர்.
இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தற்காலிகமாக கோயிலை அகற்றும் பணியை கைவிட்டு சென்றனர் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், தொடர்ந்து, பொதுமக்கள், கோயிலுக்குள் சுரங்க நிலவறை இருப்பதாக தங்கள் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே கோயிலின் தொன்மை மற்றும் சுரங்க நிலவறை குறித்து ஆய்வு செய்ய தொல்லியல் துறையினருக்கு கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட தொல்லியல் அலுவலர் பொ.கோ லோகநாதன் கடந்த மாதம் 18-ம் தேதி பட்டரைபெரும்புதூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வில், கோயில் கருவறைக்கு முன்புள்ள அர்த்த மண்டப பகுதியில் ஒன்றரை மீட்டர் அகலம், 7 அடி ஆழம் கொண்ட சுரங்க நிலவறை இருந்ததும், கோயில் வளாகத்தில் 12 ம் நூற்றாண்டைச் சேர்ந்த குலோந்துங்க சோழன் ஆட்சிக்கால கல்வெட்டு இருப்பதும் தெரிய வந்தது.
மேலும் இந்த நிலவறையினுள் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் இறங்கி பார்க்க முடியாத சூழ்நிலை இருந்தது. இதையடுத்து, தமிழக அரசின் உத்தரவின் பேரில், இன்று காலை தொல்லியல் துறையினர், தீயணைப்புத் துறையினரின் ஒத்துழைப்போடு பட்டரைபெரும்புதூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சுரங்க நிலவரையில் இறங்கி, ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வு முடிவுக்கு வந்த பிறகுதான் சுரங்க நிலவரை குறித்த முழு விபரங்கள் தெரிய வரும் என, தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.