மலைப்பாதை வழியாக இரவு 10 மணிக்கு மேல் ஏற்காடு செல்ல தடையில்லை: காவல்துறை அறிவிப்பு


சேலம்: ஏற்காடு சுற்றுலா தலத்திற்கு, மலைப்பாதை வழியாக இரவு 10 மணிக்கு மேல் வருவதற்கு தடை என்ற தகவல் தவறானது என்று சேலம் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தின் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றான ஏற்காடு, ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை கொண்டுள்ளது. குறிப்பாக கோடைகாலத்தில் இங்கு நடைபெறும் கோடை விழா மலர் காட்சியை காண்பதற்கு சுற்றுலா பயணிகள் ஒரு லட்சத்திற்கும் கூடுதலான எண்ணிக்கையில் வந்து செல்வர்.

சேலம் மாநகரை ஒட்டியுள்ள சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ள ஏற்காடு சுற்றுலாத்தலத்திற்கு, சேலம் அடிவாரத்தில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் மலைப்பாதை வழியாக செல்ல வேண்டும்.

இந்த நிலையில் ஏற்காடு சுற்றுலா தலத்திற்கு, மலைப்பாதை வழியாக இரவு 10 மணிக்கு மேல் செல்வதற்கு சேலம் மாவட்ட காவல் துறை தடை விதித்துள்ளது என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. ஆனால் இதனை மறுத்துள்ள சேலம் மாவட்ட காவல்துறை, இது போன்ற எந்தவொரு அறிவிப்பும் காவல்துறையின் சார்பில் அறிவிக்கப்படவில்லை. பொது மக்கள் வழக்கம் போல் அனைத்து நேரங்களிலும் ஏற்காட்டிற்கு பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

x