திருச்சி: கே.கே.நகர் பூங்கா பேருந்து நிறுத்தம் அருகே அரசு மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 600-க்கும் அதிகமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு தாமதமாக வந்த மாற்றுத் திறன் மாணவரை, தலைமை ஆசிரியர் அழகு சுப்பிரமணியன் அடித்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அந்த மாணவர் கூறியதையடுத்து, அவரது பெற்றோர், தலைமை ஆசிரியர் மீது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ண ப்ரியாவிடம் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, திருச்சி மாவட்டக் கல்வி அலுவலர் செல்வராஜ் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்திய நிலையில், தலைமை ஆசிரியர் அழகு சுப்பிரமணியன், இனாம் பெரிய நாயகி சத்திரம் உயர்நிலைப் பள்ளிக்கு நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இது குறித்து அறிந்த மற்ற மாணவ- மாணவிகள், அவர்களது பெற்றோர் ஆகியோர் பள்ளி வாயில் முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கே.கே. நகர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள், "தலைமை ஆசிரியர் அழகு சுப்பிரமணியன் வந்த பிறகுதான் மாணவ- மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று வருகின்றனர். அவரை மீண்டும் இதே பள்ளியில் பணியமர்த்த வேண்டும்" என்றனர். இதையடுத்து, போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை முடித்துக் கொள்ளச் செய்தனர்.
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண ப்ரியா கூறியது: அழகு சுப்பிரமணியன் சிறந்த தலைமை ஆசிரியர் தான். ஆனால், மாணவர்களை கண்டிக்கும்போது அடிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதை மீறி அவர், மாணவரை அடித்துள்ளார். இது குறித்து முறையாக விசாரணை நடத்திதான் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.