மதுரை: அருப்புக்கோட்டையில் நாளுக்குநாள் அதிகரிக்கும் போக்குவரத்தை நெரிசலைக் குறைக்க புறவழிச் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் அருப்புக்கோட்டையில் சாலைகள் விரிவாக்கம் செய்யப்படாததால் போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் சிக்கித் தவிக்கின்றனர். விருதுநகர் சாலை, மதுரை சாலை, கடை வீதி, பஜார் சாலை, பழைய பேருந்து நிலைய சாலை, திருச்சுழி சாலை, காசுக்கடை பஜார் போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக காசுக்கடை பஜார், திருச்சுழி சாலைகளில் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதாலும், தரைக் கடைகளும், தள்ளுவண்டிக் கடைகளும் சாலை ஆக்கிமித்துக் கொள்கின்றன.
இதனால், அருப்புக்கோட்டை நகருக்குள் வந்து திருச்சுழி, சாயல்குடி, கமுதி, பந்தல்குடி, தூத்துக்குடி செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்கின்றன. ஒரு பேருந்து அல்லது லாரி போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டால் அதன் பின்னால் செல்லும் அனைத்து வாகனங்களும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. அதோடு, அவசரமாக மருத்துவமனைக்குச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் இச்சாலைகளின் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்கின்றன.
இதனால் அருப்புக்கோட்டை நகருக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அருப்புக்கோட்டை-விருதுநகர் சாலையில் ரூ.133.50 கோடியில் புறவழிச்சாலை அமைக்கும் பணி கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. சுமார் 10 கி.மீ. தூரம் உள்ள இப்புறவழிச்சாலை பணிக்காக 32.25 ஹெக்டேர் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டு, நில எடுப்புக்கு ரூ.35.40 கோடி வழங்கப்பட்டது. ரூ.98.58 கோடியில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்புறவழிச் சாலை அருப்புக்கோட்டை-கோவிலாங்குளம் விலக்கில் தொடங்கி, வலதுபுறம் பிரிந்து, ஸ்ரீவில்லிபுத்தூர்-பார்த்திபனூர் சாலையில் குறுக்கிட்டு, சுக்கிலநத்தத்தில் மீண்டும் குறுக்கிட்டு தேசிய நெடுஞ்சாலையில் இணைகிறது. இப்பணிகள் முடிக்கப்பட்டு புறவழிச்சாலை திறக்கப்பட்டால் விருதுநகர், ராஜபாளையம், தென்காசியில் இருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர், ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம் செல்லும் வாகனங்கள் அருப்புக்கோட்டை நகருக்குள் செல்லாமல் போக்குவரத்து நெரிசல் இன்றி விரைவாக சென்றுவர முடியும். எனவே, அருப்புக்கோட்டை நகருக்குள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புறவழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், புறவழிச்சாலை பணிகள் 80 சதவீதம் நிறைவடை ந்துள்ளன. அருப்புக்கோட்டை-பந்தல்குடி புறவழிச்சாலை பணிகள் முடிக்கப்பட்டு போக்குவரத்துக்கு தயாராக உள்ளது. அருப்புக்கோட்டை-மதுரை சாலை இணைப்புப் பணிகள் தற்போது துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 3 மாதங்களுக்குள் பணிகள் அனைத்தும் முடிக்கப்படும், எனத் தெரிவித்தனர்.