திண்டுக்கல்: ஓ.பன்னீர்செல்வம், டிடிவி,தினகரனை மீண்டும் அதிமுகவில் சேர்க்க முடியாது என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட புலியூர் நத்தம் பகுதியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. கிழக்கு ஒன்றியச் செயலாளர் என்.பி.நடராஜ் தலைமை வகித்தார். தொப்பம்பட்டி ஒன்றியச் செயலாளர்கள் கருப்பு சாமி, முருகேசன், ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு ஒன்றியச் செயலாளர் பாலசுப்பிரமணி வரவேற்றார். முன்னாள் அமைச்சர் க.பாண்டியராஜன், அதிமுக தலைமை கழக பேச்சாளர் பாபு ஆகியோர் பேசினர்.
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் திமுக அரசு நிறுத்திவிட்டது. குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000 என்று கூறிவிட்டு, தகுதியில்லை என்று ஒரு கோடி பெண்களுக்கு திருநெல்வேலி அல்வாவை திமுக அரசு வழங்கி உள்ளது. பால் உட்பட அத்தியாவசிய உணவு பொருட்கள், கட்டுமானப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
மூன்று முறை மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சொத்து வரி, வீட்டு வரி, குப்பை வரி என வரிக்கு மேல் வரி போட்டு மக்களை துயரத்தில் ஆழ்த்தி வருகிறது திமுக அரசு. ஆட்சியில் அமர்ந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்றனர். ஆனால் இதுவரை ரத்து செய்யவில்லை. தமிழகத்தில் போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. இதனால் மாணவர்கள், இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் ஆகிய இருவரும் இரட்டை இலையை எதிர்த்து அதனை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக ராமநாதபுரத்திலும், தேனியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தனர். பொதுக் குழுவில் நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க முடியாது. பொம்மை முதல்வர் ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.