திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 750 தூய்மை பணியாளர்களின் தினசரி ஊதியத்தில் தலா ரூ.107-ஐ தனியார் நிறுவனம் பிடித்தம் செய்து விடுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சிஐடியு தலைவர் ஆர்.மோகன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் அளித்த மனு:
திருநெல்வேலி மாநகராட்சியில் தனியார் நிறுவனம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடுகள் மற்றும் கடைகளில் உள்ள குப்பைகளை சேகரித்து மாநகராட்சி குப்பை கிடங்கில் சேகரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின்கீழ் 750-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகிறார்கள். இவர்களுக்கு தினசரி ஊதியமாக, குறைந்தபட்ச கூலி சட்டப்படி, மாவட்ட ஆட்சியரின் ஆணைக்கிணங்க, திருநெல்வேலி மாநகராட்சி ரூ.520 வழங்குகிறது.
மேலும் இந்த நிறுவனத்துக்கு 15 சதவிகிதம் சர்வீஸ் கட்டணமும் வழங்கப்படுகிறது. ஆனால் தூய்மை பணியாளர்களின் ஊதியத்தில் 12 சதவிகிதம் என்ற அடிப்படையில் தினமும் ரூ.63-ஐ வருங்கால வைப்பு நிதிக்கு பிடித்தம் செய்யப்படுகிறது. இஎஸ்ஐ-க்கு தினமும் ரூ.4 பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக பிடித்தம் செய்த பணத்தை வருங்கால வைப்புநிதி நிறுவனத்திலோ, இஎஸ்ஐ நிறுவனத்திலோ அந்த நிறுவனம் செலுத்தவில்லை. இதனால் தொழிலாளர்கள் விபத்து மற்றும் நோய் ஏற்பட்டால் மருத்துவ சிகிச்சைகூட முறையாக பெறமுடியவில்லை. மேலும் பணியாளர்களின் ஊதியத்தில் மேலும் ரூ.50 பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த பிடித்தம் எதற்காக என்று இதுவரையிலும் தெரியப்படுத்தவில்லை. இந்த பிடித்தங்கள்போக தொழிலாளர்களுக்கு தினசரி ஊதியமாக ரூ.403 மட்டுமே வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமும், திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகத்திடமும் பலமுறை தொழிலாளர்கள் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தொழிலாளர்களிடம் தினசரி ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.50-ஐ திருப்பி வழங்கவும், மாநகராட்சி வழங்கும் சட்டப்படியான ஊதியத்தை தொழிலாளர்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.