மதுரை: மதுரைக்கல்லூரி மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவர் தினேஷ், விபத்தில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலும் இன்று பிளஸ் 1 தமிழ்ப்பாடத் தேர்வை 'ஸ்ட்ரெச்சரில்' வந்து தேர்வு எழுதினார்.
மதுரை விராதனூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சுமதியின் மகன் தினேஷ் (16). இவர் மதுரைக்கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். தந்தை இறந்துவிட்டதால், தாய் சுமதி அரிசி ஆலையில் கூலி வேலை செய்து இம்மாணவனையும், அவரது தங்கையும் வளர்த்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் 500க்கு 420 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
இவர் மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்துடன் பிளஸ் 1-ல் அறிவியல் பிரிவு எடுத்து படித்து வருகிறார். கடந்தாண்டு ஜூலை மாதம் ஊரில் அரசுப் பேருந்து வர தாமதமானதால், உள்ளூர் நபரின் இருசக்கர வாகனத்தில் ஏறிச்சென்றபோது, பின்னால் வந்த அரசு பேருந்து மோதியதில் மாணவன் தினேஷ் படுகாயமடைந்தார். இதில் இடுப்பு, கால்களில் பலத்த காயமேற்பட்டு மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இன்று பிளஸ் 1 அரசுப் பொதுத்தேர்வு நேற்று தொடங்கியதால், மாணவன் தினேஷ் அவரது தாய் சுமதியுடன் மதுரைக்கல்லூரி மேல்நிலைப்பள்ளிக்கு தேர்வு எழுத ஆட்டோவில் வந்தார். அவருக்கு பள்ளி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்ட்ரெச்சரில் அமர்ந்தவாறு அம்மாணவர் சொல்லச்சொல்ல நியமிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் தேர்வு எழுதினார். இச்சம்பவம் அம்மாணவரின் கல்வியின் மீதான லட்சியத்தை காட்டியது.
இதுகுறித்து மாணவர் தினேஷ் கூறுகையில், ''எனக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்பது லட்சியம். எனது தந்தை நான் சிறுவனாக இருக்கும்போதே இறந்துவிட்டார். எனது தாய் சுமதி கூலி வேலை பார்த்து என்னையும், தங்கையையும் பராமரித்து வருகிறார். எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி படுகாயமடைந்த என்னை, தாய் வேலையை விட்டு கவனித்து வருகிறார். அவரது கனவை படித்து கட்டாயம் நிறைவேற்றுவேன்,'' என்றார்.
இதுகுறித்து மதுரைக்கல்லூரி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பாலாஜிராம் கூறுகையில், ''மாணவன் தினேஷ், மருத்துவம் படித்து டாக்டராக வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்தார். எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அவருக்கு கல்வி தொடர்பான உதவிகளை செய்துவருகிறோம். ஏழ்மை நிலையிலுள்ள அவரது குடும்பத்தினருக்கு தொண்டுநிறுவனங்கள் உதவினால் அம்மாணவர் லட்சியத்தை அடைய உதவியாக இருக்கும்,'' என்றார்.