சிவகங்கை: காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையருக்கு எதிராக கையைக் கத்தியால் அறுத்துக்கொண்டு பெண் ஊழியர் போராட்டம் செய்தார். அந்தப் பெண் ஊழியரும், அவரது கணவரும் அவதூறாகப் பேசியதாக ஆணையர் போலீஸில் புகார் செய்தார்.
காரைக்குடி மாநகராட்சி அலுவலக இளநிலை உதவியாளராகர் ஷர்மிளா பர்வீன் (35). இவர் அலுவலகத்தில் வருவாய் பிரிவில் கவுன்ட்டரில் வரி வசூலைக் கவனிக்கிறார். நேற்று ஆணையர் தனக்கு அதிக பணிச்சுமை கொடுப்பதாகவும், மிரட்டுவதாகவும் கூறி தன் கையை கத்தியால் அறுத்துக்கொண்டு ஆணையர் அறை முன் தர்ணாவில் ஈடுபட்டார்.
அப்போது அங்கு வந்த போலீஸார், அவரை சிகிச்சைக்கு அழைத்தபோது செல்ல மறுத்தார். இதையடுத்து ஷர்மிளா பர்வீனை வலுக்கட்டாயமாக காரில் அழைத்துச் சென்று தனியார் மருத்துவமனைக்யில் அனுமதித்தனர்.
இதனிடையே ஷர்மிளா பர்வீன், அவரது கணவர் பொதுமக்கள் முன்னிலையில் நிர்வாகத்தை அவதூறாகப் பேசிதாக ஆணையர் சித்ரா காவல்துறையில் புகார் செய்தார். இச்சம்பவம் குறித்து இரு தரப்பிலும் காரைக்குடி வடக்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து ஆணையர் சித்ரா கூறியதாவது: மார்ச் மாதம் என்பதால் வரி பாக்கியை தீவிரமாக வசூலிக்கிறோம். இதனால் அலுவலக உதவியாளர் முதல் ஆணையர் வரை அனைவரும் இரவு வரை பணி செய்து வருகிறோம். வருவாய் பிரிவில் 3 கவுன்ட்டர்கள் மூலம் வரி வசூலிக்கப்படுகிறது.
ஒரு கவுன்ட்டரில் பணம் வசூலிக்கும் ஷர்மிளா பர்வீன் சரியாகப் பணி செய்யாததால் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதையடுத்து அவரை அழைத்துக் கண்டித்தேன். அப்போது என்னை எதிர்த்துப் பேசிவிட்டு திடீரென கையை அறுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவரது கணவரும் நிர்வாகத்தை அதூறாகப் பேசினார்.
இதையடுத்து போலீஸாரை வரவழைத்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன். நானும் காவல் துறையில் புகார் கொடுத்தேன். இவ்வாறு அவர் கூறினார்.