ஸ்ரீவைகுண்டத்தில் பழங்கால மண்பாண்ட சிதறல்கள் கண்டுபிடிப்பு: அகழாய்வு நடத்த கோரிக்கை!


நெல்லை: ஸ்ரீவைகுண்டத்தில் புதிய கட்டிட பணிக்காக குழி தோண்டிய போது பழங்கால மண்பாண்ட சிதறல்கள் கிடைத்தன. எனவே, இது பண்டைய தமிழர்களின் வாழ்விட பகுதியா என விரிவாக ஆய்வு நடத்த தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாமிரபரணி ஆற்றங்கரை ஓரங்களில் உள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் அகழாய்வுகள் மூலம் பழங்கால தமிழர்களின் வாழ்வியல் முறைகளும், அவர்கள் வாழ்ந்த காலமும் கண்டறியப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பரம்பு பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வு பணிகளில் பழங்கால மனிதர்களை அடக்கம் செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட முதுமக்கள் தாழிகளும், அவர்கள் பயன்படுத்திய பொருட்களும் அதிகளவில் கிடைத்துள்ளன.

இந்நிலையில், ஸ்ரீவைகுண்டத்தில் புதிய கட்டிடப் பணிக்காக தோண்டப்பட்ட குழியில் மண்பாண்ட சிதறல்கள் கிடக்கின்றன. கருப்பு, சிவப்பு மண்பாண்டங்கள், பானையில் கிராபிட்டி கிறுக்கல்கள், அடையாளங்கள், விலங்குகளின் எலும்புகள் குவிந்து கிடக்கின்றன. இவைகளை சிவகளை தொல்லியல் கழக நிறுவனரும் வரலாற்று ஆசிரியருமான மாணிக்கம் பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறியதாவது: தற்போது வாழ்வியல் பகுதிகளை தேடும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கடற்பகுதிகளில் வாழ்விடப் பகுதிகள் இருக்குமா என்ற அடிப்படையில் கடல்சார் ஆய்வு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பு அலெக்ஸாண்டர் ரியா ஆய்வு செய்தபோது, தாமிரபரணி கரையோரங்களில் 33 இடங்களை அடையாளம் கண்டுள்ளார். இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன.

மக்கள் வாழ்ந்த பகுதிகளாக கண்டறியக்கூடிய கருப்பு சிவப்பு மண்பாண்டங்கள், எலும்பு துண்டுகள், குறியீடுகள் உள்ள மண்பாண்ட சிதறல்கள் உள்ளன. தொல்லியல் துறையினர் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டால் ஆதிச்சநல்லூர் வாழ்விடப் பகுதி குறித்த தகவல்களும், ஆதிச்சநல்லூருக்கும், சிவகளைக்கும் உள்ள தொடர்பும் தெரியவரும்.

5,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இரும்பு காலத்தை சேர்ந்த மக்கள் பொருநை நதிக்கரையோரம் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் சிவகளை அகழாய்வில் கிடைத்துள்ளன. பழங்கால தமிழர்களின் வாழ்விடப் பகுதி எது என்பது தெரியாமல் உள்ள நிலையில், அதை கண்டறிய ஸ்ரீவைகுண்டத்தில் கிடைத்துள்ள மண்பாண்ட குவியல்களை ஆய்வு செய்வதுடன், ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் உள்ள தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களிலும், குளங்களின் கரையோரங்களிலும் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என்றார்.

x