தஞ்சை: ஒரத்தநாடு அருகே பலூனை விழுங்கிய 7 மாத ஆண் குழந்தை உயிரிழந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (35), இவரது மனைவி சிவகாமி (30), இவர்களின் 7 மாத ஆண் குழந்தை பிரகதீசன். இந்நிலையில், வீட்டில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்த போது மயங்கிய விழுந்த குழந்தை, வெகு நேரமாக அசைவு இல்லாமல் இருந்துள்ளது. அப்போது, சிவகாமி குழந்தைக்கு பால் கொடுக்க முயன்றபோது, மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிறகு பெற்றோர், உறவினர்கள் குழந்தையின் உடலை ஊருக்கு கொண்டு சென்று, இறுதி சடங்கு செய்ய ஏற்பாடு செய்தனர். இருப்பினும், குழந்தை இறப்பில் சந்தேகம் ஏற்பட்டதால், குழந்தையின் இறப்பு குறித்து அறிய, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தையின் உடலை நேற்று கொண்டு வந்தனர்.
அங்கு குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்தபோது, குழந்தையின் தொண்டை பகுதியில் பலூன் சிக்கி இருந்தது தெரியவந்தது. பிறகு குழந்தையின் தொண்டை பகுதியில் இருந்த பலூன் அகற்றப்பட்டது. குழந்தை பலூனை விழுங்கியதால் தான் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர், பெற்றோரிடம் குழந்தையின் உடல் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக திருவோணம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.