திருவாரூர்: தியாகராஜ சுவாமி கோயில் ஆழித் தேரோட்டம் ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான தேர் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்கும் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித் தேரோட்டம், உலகப் பிரசித்தி பெற்றதாகும். நிகழாண்டு ஆழித் தேரோட்ட விழா வரும் மார்ச் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் வீதியுலா நடைபெற உள்ளது.
தொடர்ந்து ஆழித் தேரோட்டம் ஏப்.7-ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ஆழித்தேர் கட்டுமான பணிகள் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணியில் 25 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தேர் 5 நிலைகளுடன், 96 அடி உயரம், 66 அடி அகலத்தில் பனஞ் சப்பைகள், மூங்கில்கள் கொண்டு அமைக்கப்படுகிறது.
தேர் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இதன் மொத்த எடை 300 டன் ஆகும். ஆழித்தேரில் நேற்று வரை 2 நிலைகள் கட்டி முடிக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் புதிய மூங்கில் கம்புகள் தேர் கட்டுமானத்துக்கு பயன் படுத்தப்படுகின்றன.
இதுதொடர்பாக தேர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள சரவணன் கூறியதாவது: ஆழித் தேரோட்டம் ஏப்.7-ம் தேதி நடைபெறும் நிலையில், ஏப்.5-ம் தேதிக்குள் கட்டுமான பணிகள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். அதேபோல, தேர் கலசம் மற்றும் மேற்கூரை அலங்காரம் செய்வதற்கான சீலைகள் மற்றும் தொம்பைகள், பிரம்மாண்ட குதிரை பொம்மைகள் ஆகியவற்றை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன என்றார்.