திருச்சி அதிமுக மாவட்டச் செயலாளர் மீது தேசிய எஸ்.சி, எஸ்.டி ஆணையத்தில் புகார்


திருச்சி: அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் மீது தேசிய எஸ்.சி., எஸ்.டி., ஆணையத்தில் முன்னாள் நிர்வாகி புகார் அளித்துள்ளார்.

திருச்சி அதிமுக பகுதி செயலாளராக இருந்தவர் சுரேஷ் குப்தா. அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளராக உள்ள ஜெ. சீனிவாசன், தனது உறவினர்களுக்கு கட்சியில் பொறுப்பு வழங்க முன்னுரிமை கொடுப்பதுடன், ஜாதிய பாகுபாடுடன் நடந்து கொள்வதாகவும், தன்னை ஜாதி ரீதியாக திட்டினார் என்றும் சுரேஷ் குப்தா அண்மையில் குற்றம்சாட்டியதுடன், கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தார். இது குறித்து மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்திருந்தார்.

இந்நிலையில், சென்னையில் நேற்று தேசிய எஸ்.சி., எஸ்.டி., ஆணைய இயக்குநர் ரவிவர்மனிடம் நேற்று சுரேஷ் குப்தா புகார் மனு அளித்தார். அதில், தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த தன்னை ஜாதி பெயரை சொல்லி திட்டி அவமானப்படுத்திய அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து மாநில எஸ்.சி, எஸ்.டி ஆணையர் அலுவலகம், டிஜிபி அலுவலகத்திலும் மனு அளித்தார். அவருடன் வழக்கறிஞர் பொன்.முருகேசன் உடன் இருந்தார். இது குறித்து மாநகர் மாவட்டச் செயலாளர் ஜெ.சீனிவாசனிடம் கேட்டபோது, ‘‘நான் எது சொன்னாலும் தவறாக கருதுவார்கள். நான் மிகவும் மனம் நொந்து உள்ளேன்" என்றார்.

x