அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தாலிக்கு தங்கம் திட்டம் செயல்படுத்தப்படும்: இபிஎஸ் உறுதி


சேலம்: அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கான தாலிக்கு தங்கம் கொடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மாற்றுக் கட்சியில் இருந்து விலகியவர்கள் அதிமுக-வில் இணையும் நிகழ்ச்சி ஆத்தூரில் நேற்று நடைபெற்றது. சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில், மாற்றுக் கட்சியினர் அதிமுக-வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின்போது, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசியதாவது: திமுக தலைவர் ஸ்டாலின், பொதுக்கூட்டங்களிலும் ஊடங்களிலும் பேசும்போது, வரப்போகும் தேர்தலில் திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்கிறார். ஆனால், மாற்றுக் கட்சியினர் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அதிமுக-வில் தங்களை இணைத்துக் கொண்டதை வைத்தப் பார்க்கும்போது, அதிமுக வலுவடைந்து வருகிறது. திமுக தேய்ந்து வருகிறது.

தலைவாசல் அருகே 1,000 ஏக்கரில், ஆசியாவிலேயே பெரிய கால்நடை ஆராய்ச்சிப் பூங்காவை, ரூ.1,050 கோடியில் கொண்டு வந்தோம். அந்த பூங்காவை, சம்பிரதாயத்துக்காக திறந்து வைத்துள்ளனர். அம்மா மினி கிளினிக் திட்டம் மூடப்பட்டது. இன்றைக்கு தங்கம் ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்துக்கு விற்பனை ஆகிறது. ஏழை பெண்கள் திருமணம் செய்வதற்கு சிரமப்படும் நிலை உள்ளது. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை திமுக நிறுத்திவிட்டது. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

முதல்வர் ஸ்டாலின், மக்களுக்கு ரூ.1,000 கொடுக்கிறோம் என்கிறார். ஆனால், சட்டப்பேரவையில் அதிமுக பேசி, அழுத்தம் கொடுத்ததன் காரணமாகவே, ஆட்சிக்கு வந்து 28 மாதங்கள் கழித்து , பெண்களுக்கு ரூ.1,000 கொடுத்தார். அதிமுக வெற்றி பெற்றால், பெண்களுக்கு மாதம் ரூ.1,500 கொடுக்கப்படும், என்றோம், மக்கள் அதை நம்பவில்லை. திமுக-வினர் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி, மக்கள் ஏமாந்துவிட்டனர்.

வேலை உறுதித் திட்டத்தை 100 நாளில் இருந்து, 150 நாளாக உயர்த்துவோம். அதற்கான சம்பளத்தை உயர்த்துவோம், என்றனர். அதையும் செய்யவில்லை. இத்திட்டத்துக்கான ரூ.2,112 கோடி வரவில்லை என்கின்றனர். மத்திய அரசிடம் இருந்து நிதி வரவில்லை என்றால், மாநில அரசின் நிதியில் இருந்து, தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். அப்படி செய்யாததால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியமாக வழங்கப்படும் என்றெல்லாம் அறிவித்தார். அதையும் தரவில்லை. கூட்டுறவு வங்கியில் அடகு வைத்த நகைகளின் கடன்தொகை தள்ளுபடி செய்யப்படும், என்றனர். அடமானம் வைத்திருந்த 48 லட்சம் பேரில், 15 லட்சம் பேருக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மக்களை ஏமாற்றுவது தான் திமுக ஆட்சி. இந்த ஆட்சியில் ஏழைகளுக்கு என எந்தவொரு திட்டமாவது கொண்டு வந்துள்ளார்களா?, என்றார்.

x