புதுடெல்லி: மதுரை - சிங்கப்பூர் விமான சேவையை தொடர டெல்லியில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான தலைமை நிர்வாக அதிகாரி அலோக் சிங்கிடம் மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
மதுரை - சிங்கப்பூருக்கு தினமும் மதியம் 1.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டுச் செல்கிறது. நிர்வாக காரணங்களுக்காக அந்த விமானம் ஏப்ரல் மாதத்தில் நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் டெல்லியிலுள்ள ஏர் இந்தியா விமான தலைமை நிர்வாக அதிகாரி அலோக் சிங் என்பவரை சந்தித்து, மதுரை-சிங்கப்பூர் விமான சேவையை தொடர்ந்து இயக்க வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: மதுரை - சிங்கப்பூர் விமான சேவையை ரத்து செய்யும் முடிவை திரும்ப பெற வலியுறுத்தினேன். மதுரை விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கும், கோலாலம்பூர் போன்ற பிற முக்கிய நகரங்களுக்கும் விமான சேவை வழங்கும் வாய்ப்பு குறித்தும் பேசப்பட்டது. மதுரை-சிங்கப்பூர் விமானத்தில் கடந்த 3 மாதங்கள் தவிர, பிற 9 மாதங்களில் மதுரை விமான நிலையத்திலிருந்து 50 முதல் 60 சதவீத பயணிகளே பயணித்துள்ளதால், வர்த்தகரீதியாக இச்சேவையை தொடர்ந்து இயக்குவது சிரமமாக இருப்பதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதிகாரி கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் இருந்து பயணிகளை அதிகரிக்க தொடர்ந்து முயற்சிக்கிறோம், மதுரை-சிங்கப்பூர் விமான சேவையை நீடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்தது. இவ்வாறு அவர் கூறினார்.