தொகுதி மறுவரையறை தென்மாநிலங்களுக்கான தண்டனை: அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வர் பேச்சு!


சென்னை: மக்களவை தொகுதி மறுவரையறை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், தொகுதி மறுவரையறை தேசத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி உள்ள மாநிலங்களுக்கு கிடைத்துள்ள தண்டனையாக அமைந்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக, தமாகா தவிர திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாமக, நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, விசிக, மனிதநேய மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் நீதி மய்யம், தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட 56 கட்சிகள் பங்கேற்றன.

இக்கூட்டத்தில் அதிமுக சார்பில் ஜெயக்குமார், பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ், விசிக சார்பில் திருமாவளவன், மதிமுக சார்பில் வைகோ, காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, இடதுசாரிகள் சார்பில் முத்தரசன், பெ.சண்முகம், மநீம சார்பில் கமல்ஹாசன், தவெக சார்பில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தமிழகத்தில் மொத்தமாக 8 மக்களவைத் தொகுதிகளை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது தேசத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி உள்ள மாநிலங்களுக்கு கிடைத்துள்ள தண்டனையாக அமைந்துள்ளது. இது ஒட்டுமொத்த தென் மாநிலங்களுக்கும் ஏற்பட்டுள்ள அபாயம். அதனால் மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறையை எதிர்க்கும் நிலையில் உள்ளோம்.

இந்த விவகாரத்தில் கட்சி எல்லைகளை கடந்து அனைவரும் இணைய வேண்டும். தொகுதி மறுவரையறை நடவடிக்கையினால் தென் மாநிலங்களில் மக்களவை தொகுதிகளை குறைப்பது நம் குரலை நசுக்கும் முயற்சி. இது அரசியல் பிரதிநிதித்துவத்தின் மீதான நேரடி தாக்குதல். இந்த சதியை நாம் முறியடிக்க வேண்டும். தொகுதி மறுவரையறை என்ற கத்தி, தென்மாநிலங்களின் தலைக்கு மேல் உள்ளது” என பேசினார்.

இந்த கூட்டத்தில், தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை இந்த அனைத்து கட்சி கூட்டம் எதிர்க்கிறது. இது நியாயமற்ற செயல். 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட தொகுதிகள் தொடர வேண்டும். தென்மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்படும். மக்களவை தொகுதி மறுவரையறையை 30 ஆண்டுகள் ஒத்திவைக்க வேண்டும். இதற்கான உறுதியை பிரதமர் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களை முதல்வர் முன்மொழிந்தார்.

x