சென்னை: வங்கிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், வாரத்துக்கு 5 நாட்கள் வேலை நாட்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மத்திய நிதித் துறை செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு சார்பில், மத்திய நிதித் துறை செயலர் நாகராஜுக்கு அனுப்பியுள்ள கடித விவரம்: நாட்டின் நிதி கட்டமைப்புக்கு முதுகெலும்பாகத் திகழும் வங்கிகளில் ஊழியர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பணி ஓய்வு, விருப்ப ஓய்வு மற்றும் ஊழியர்களைத் தேர்வு செய்யாதது உள்ளிட்ட காரணங்களால், பொதுத் துறை வங்கிகளில் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
கடந்த 2013-ம் ஆண்டு வங்கிகளில் எழுத்தர் பணியாளர்கள் 3.98 லட்சமாக இருந்தனர். இது, தற்போது 2.46 லட்சமாக குறைந்துவிட்டது. அதே போல், கடைநிலை ஊழியர்களின் எண்ணிக்கை 1.53 லட்சத்திலிருந்து 94 ஆயிரமாகக் குறைந்துவிட்டது.
அதேசமயம், தனியார் வங்கிகளில் 2014-ம் ஆண்டு 2.25 லட்சமாக இருந்த ஊழியர்களின் எண்ணிக்கை 2024-ம் ஆண்டு 7.96 லட்சமாக அதிகரித்துள்ளது. ஊழியர் பற்றாக்குறை காரணமாக வங்கிகளில் வேலைப்பளு மற்றும் தவறுகள் அதிகரித்துள்ளதோடு, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையும் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, வங்கிகளில் உள்ள காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும். மேலும், வங்கிகளில் தற்காலிக அடிப்படையில் வேலை செய்யும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வாரத்துக்கு 5 நாட்கள் வங்கிகள் வேலை நாட்களாக அறிவித்து செயல்படுத்த வேண்டும்.
மேலும், வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது வாடிக்கையாளர்கள் தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.