அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்க கோரி தர்ணா போராட்டம்


படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மதுரை: அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.ராஜேஸ்வரி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் ரா.தெய்வராஜ் முன்னிலை வகித்தார். இதில் 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து பதவி உயர்வு பட்டியலில் காத்திருக்கும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு ‘பேஸ் கேப்ச்சர்’ முறையை மத்திய அரசு கைவிட வேண்டும்.

மே மாதம் ஒரு மாதம் கோடை விடுமுறை அறிவிக்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் அச்சங்க மாவட்டச் செயலாளர் அ.வரதலட்சுமி, சிஐடியு மாவட்டச் செயலாளர் ரா.லெனின், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் க.நீதிராஜா, மாவட்டச் செயலாளர் க.சந்திரபோஸ் ஆகியோர் பேசினர்.

சிஐடியு மாவட்டச் செயலாளர் ஜெ.லூர்து ரூபி நிறைவுரை ஆற்றினார். முடிவில் மாவட்டப் பொருளாளர் பா.ரமேஷ்வரி நன்றி கூறினார். மாவட்ட நிர்வாகிகள் லட்சுமி, ஹேமலதா, கவிதா, மாலதி உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

x