ஈஷாவில் களைகட்டும் ‘தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா’வில் நாட்டு மாடு சந்தை, ரேக்ளா பந்தயங்கள்!


தமிழ்த் தெம்பு விழா குழுவின் தன்னார்வலர் வள்ளுவன்

கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் வகையில், கடந்த மாதம் 27-ம் தேதி முதல் ‘தமிழ்த்தெம்பு - தமிழ் மண் திருவிழா’ நடைபெற்று வருகிறது.

வரும் 9-ம் தேதி வரை நடைபெறும் இந்த விழா குறித்து, முன்னோடி இயற்கை விவசாயியும், தமிழ்த் தெம்பு விழா குழுவின் தன்னார்வலருமான வள்ளுவன் கோவையில் இன்று (மார்ச்.4) செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் வழிகாட்டுதலின் படி, தமிழ் மொழியின் செழுமையையும், தமிழ் மண்ணின் கலாச்சாரம், வீரம், கலைகள், வரலாறு, உணவு முறைகள், வாழ்வியல் உள்ளிட்ட தமிழர் பண்பாட்டின் தொன்மையையும் கொண்டாடும் விதமாக ‘தமிழ்த் தெம்பு திருவிழா’ மிகவும் பிரம்மாண்டமான முறையில் கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இத்திருவிழா வரும் மார்ச் 9-ம் தேதி வரை 11 நாட்கள் ஆதியோகி முன்பு நடைபெறுகிறது. இத்திருவிழாவில் 150-க்கும் மேற்பட்ட கைவினை, கைத்தறி, உணவு, விவசாய மற்றும் விளையாட்டு பொருட்களின் அரங்குகள் இடம் பெற்றுள்ளன.

நாட்டின மாடுகள், குதிரைகள் மற்றும் பிற கால்நடைகளின் கண்காட்சியும் இத்திருவிழாவில் நடைபெற்று வருகிறது. ஆதியோகி முன்பு, வரும் 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை ‘நாட்டு மாடுகள் மற்றும் குதிரைகளின் சந்தையும்’ நடைபெறவுள்ளன. விழா நடக்கும் 11 நாட்களும் மாலை நேரங்களில் தமிழ் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதனுடன் ஈஷா சமஸ்கிருதி மாணவர்கள் வழங்கும் 'நாயன்மார்கள் கதையாடல்' மற்றும் கலை நிகழ்ச்சிகளும், 20 புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனையும் நடைபெறுகின்றன.

மேலும், சிலம்பப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி, கோலப் போட்டி, பறையிசைப் போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இப்போட்டிகள் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் என இரண்டு பிரிவுகளாக நடைபெற உள்ளன. இதில் பங்கேற்று வெற்றி பெறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கபட உள்ளன.

வீர விளையாட்டான ‘ரேக்ளா பந்தயம்’ மார்ச் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இதனுடன் பொது மக்களும், குழந்தைகளும் பங்கேற்று விளையாடி மகிழும் வகையில் கேளிக்கை விளையாட்டுகளும், மெகா ராட்டினங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

x