“டாஸ்மாக் வருவாயை காட்டிலும் கள் விற்பனையில் இரு மடங்கு லாபம் உறுதி!” - அண்ணாமலை பேச்சு


உடுமலை: "ரசாயனங்கள் மூலம் தயாரிக்கப்படும் மதுவால் அரசுக்கு கிடைக்கும் வருவாயை காட்டிலும், இயற்கையான கள் விற்பனை மூலம் அரசுக்கு 2 மடங்கு கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது" என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

உடுமலை அடுத்த கொங்கல்நகரம் கிராமத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் கள் விடுதலை கருத்தரங்கம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வேலாயுதம் தலைமையில் நடைபெற்றது. இதில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், மாநில துணை செயலாளர் சண்முகவேலு, இந்திய ஜனநாயக கட்சி மாநில தலைவர் ரவி பச்சைமுத்து, கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: டாஸ்மாக் மது விற்பனை மூலம் அரசுக்கு ரூ.50 ஆயிரம் கோடியும், சாராய ஆலை அதிபர்களுக்கு ரூ.1 லட்சம் கோடியும் ஆண்டு வருவாய் கிடைக்கிறது. கள் போதைப் பொருள் அல்ல அதில் 3.8 சதவீதம் மட்டுமே ஆல்கஹால் உள்ளது. ஆனால் பீரில் 12 சதவீதமும், இதர மது வகைகளில் 40 சதவீதம் ஆல்கஹால் உள்ளது.

தமிழகத்தில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களின் எண்ணிக்கை 5.8 கோடி, அதில் ஆண்களின் எண்ணிக்கை 2.8 கோடி. அதில் குடிக்கு அடிமையான ஆண்களின் எண்ணிக்கை 1.10 கோடி. மேலும் குடிக்கு அடிமையானவர்களின் உற்பத்தி திறன் வகையில் ஆண்டுக்கு ரூ.87 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வறிக்கையில் ஒன்றில் தெரியவந்துள்ளது. ஆக டாஸ்மாக் மது விற்பனையால் அரசுக்கு எவ்வித லாபமும் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

சாராய ஆலை நடத்துவர்களைச் சார்ந்தே அரசு இயங்கும் சூழல் உள்ளது. ஆனால் தென்னை மற்றும் பனை மரங்களை சார்ந்து கள் விற்பனை செய்தால் அதனை சார்ந்த விவசாயிகள், பனை ஏறிகள் என பல லட்சம் பேர் பயனடைவர். எவ்வித ரசாயன கலப்பும் இல்லாத இயற்கையான கள் விற்பனை மூலம் அரசு ஆண்டுக்கு ரூ.1.10 லட்சம் கோடி வருவாய் ஈட்ட முடியும். அதற்கான திட்ட அறிக்கை பாஜக இணையதளத்தில் உள்ளது.

1987-ல் நிலவிய பிரச்சினை இப்போது இல்லை. காலம் மாறிவிட்டது. கள்ளுக் கடைகளுக்கான தடையை நீக்க வேண்டிய தருணம் வந்து விட்டது. 2026-ல் பாஜக ஆட்சி அமைந்த உடன் முதல் நாள், முதல் கையெழுத்து கள் தடை நீக்குவதாக இருக்கும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

டி.டி.வி தினகரன் பேசும்போது, “திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கள் இறக்குபவர்களையும் சேர்த்து போராடவேண்டும். திருநெல்வேலி பகுதியில் கள் இறக்குவது பிரதான தொழிலாக இருந்தது. எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் கள் விற்பனை செய்யப்பட்டது. பின் தடை விதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அதை விட கேடு தரும் கஞ்சா உள்ளிட்டவை விற்கப்பட்டு வருகிறது. எனவே கள் விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும்’என்றார். இந்நிகழ்ச்சியில் தென்னை விவசாயிகள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

x