மதுரை: குமரி மாவட்டத்தில் விவசாய நிலங்களில் மனைப்பிரிவுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரிய வழக்கில் நகர் ஊரமைப்பு இயக்குநர் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் அருள்ஞானபுரத்தைச் சேர்ந்த தினகரன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “புத்தேரி, இறச்சகுளம் வருவாய் கிராமங்களில் விவசாய நிலங்கள் அரசு விதிமுறைகளை மீறி மனைபிரிவுகளாக மாற்றப்பட்டு வருகிறது. இந்த மனை பிரிவுகளுக்காக விவசாய நிலங்கள், அரசு புறம்போக்கு பாசன கிளைக் கால்வாய்கள் அழிக்கப்பட்டு, அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் செல்ல முடியாமலும் வேலி அமைத்து சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது.
சட்டப்படி வீட்டு மனை பிரிவுக்கு அங்கீகாரம் பெற, சம்பந்தப்பட்ட விவசாய நிலம் 30 ஆண்டுகள் தரிசு நிலமாக இருக்க வேண்டும். மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும். வேளாண்மை துறையில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். மனை பிரிவு அருகே வாய்க்கால், கால்வாய், குளம், ஏரி, ஆறு போன்ற நீர் நிலைகள் இருக்கக்கூடாது. இவற்றை உச்ச நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் பலமுறை உறுதி செய்துள்ளது.
இந்த விதிமுறைகளை மீறி புத்தேரி, இறச்சகுளம் வருவாய் கிராமங்களில் பல ஏக்கர் விவசாய நிலம் மனைபிரிவாக மாற்றப்பட்டு வருகிறது. விவசாய நிலங்கள் வைத்திருப்பவர்கள் விவசாயம் செய்யக்கூடாது என்றும், நிலங்களை தங்களுக்கு விற்பனை செய்யுமாறும் மிரட்டப்படுகின்றனர். இவ்வாறு செய்து மொத்த விவசாய நிலத்தை மனைப்பிரிவாக மாற்ற முயற்சி செய்கின்றனர்.எனவே இந்த மனை பிரிவுக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்தும், மனைப்பிரிவாக மாற்றப்பட்ட விவசாய நிலங்கள், பாசன நீர் நிலைகளை பழைய நிலைக்கு கொண்டு வரவும் உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எல்.விக்டோரியாகவுரி அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.பாலாஜி நிவாஸ் வாதிட்டார். பின்னர் நீதிபதிகள், மனுதாரின் மனுவை தமிழக நகர் ஊரமைப்பு இயக்குநர் 12 வாரத்தில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.