தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கிடையாதா? - பிரேமலதாவுக்கு ஷாக் கொடுத்த எடப்பாடி பழனிசாமி!


சேலம்: தேமுதிக-வுக்கு மாநிலங்களவை சீட் கொடுக்கப்படுமா என்ற கேள்விக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பதிலளித்துள்ளார்.

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது, “தருமபுரியில் மாவட்டத்தை நிர்வகிக்கும் ஆட்சியரையும், சட்டம் ஒழுங்கை காக்கும் காவல்துறை எஸ்பி-யையும் திமுக மாவட்டச் செயலாளர் மிரட்டும் ஆடியோ வெளியாகிஉள்ளது. அப்படி இருக்கும்போது, சாதாரண அலுவலர்களின் நிலை எப்படி இருக்கும். அரசு இயந்திரம் எப்படி செயல்படும். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில், அதிமுக பங்கேற்று, தனது கருத்துகளை தெரிவிக்கும்” என்றார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, பாஜக-உடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறதா? என்ற கேள்விக்குப் பதிலளித்தபோது. “வரப்போகும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக-வை வீழ்த்த தயாராக இருக்கிறோம். எங்களுக்கு இருக்கும் ஒரே எதிரி திமுக தான். மற்ற கட்சிகள் எங்களுக்கு எதிரி கிடையாது. தேர்தலில் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் இருக்க வேண்டும். மக்கள் விரோத திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும். தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு காலம் இருக்கிறது. அப்போது யார் யார் எங்கு இருக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாக தெரியும். இப்போது கூட்டணி குறித்து யூகத்தின் அடிப்படையில் பதிலளிக்க முடியாது” என்றார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை அம்மா என்று அழைத்தது போல, முதல்வர் ஸ்டாலினை அப்பா என்று அழைக்கப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், “இப்படி அழைக்கப்படுவது சரியா என்பதை அவர்கள் உணர வேண்டும். இதனால் குடும்பத்தில் பிரச்சினை வந்துவிடும்” என்றார்.

தேமுதிக-வுக்கு மாநிலங்களவை சீட் கொடுக்கப்படுமா? என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், “நாங்கள் ஏதாவது சொன்னோமா? யாரோ கேட்பது குறித்து என்னிடம் கேட்காதீர்கள். அப்போது தேர்தல் உடன்படிக்கையில் அப்படி ஏதும் உள்ளதா? அதனை பாருங்கள். அதன்படியே நடைமுறை இருக்கும்” என்றார்.

x