திருவண்ணாமலை கண்ணமங்கலம் அருகே மலக்கசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு


திருவண்ணாமலை: கண்ணமங்கலம் அருகே வண்ணாங்குளத்தில் மலக்கசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் என்பதால் திட்டத்தை கைவிட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த வண்ணாங்குளம் ஊராட்சியில் ரூ.7 கோடியில் கழிவுநீர் மற்றும் மலக்கசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வு பணியை வேலூர் மண்டல பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலகம் மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்துக்கு ஆட்சேபனை எழுந்துள்ளது. வண்ணாங்குளம் ஊராட்சியில் மலக்கசடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்தாலும், இதன் பாதிப்பு அருகாமையில் உள்ள பெரிய அய்யம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் எதிரொலிக்கும் என பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பெரிய அய்யம்பாளையம் ஊராட்சி மக்கள் கூறும்போது, “கண்ணமங்கலம் பேரூராட்சியில் சுமார் 10 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இந்த பேரூராட்சியில் சேகரிக்கப்படும் கழிவுநீர் மற்றும் மலக்கசடுகளை சுத்திகரிக்க, வண்ணாங்குளம் ஊராட்சியை தேர்வு செய்துள்ளனர். இதற்காக, ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, இடத்தை ஆய்வு செய்துள்ளனர். இவர்கள் தேர்வு செய்துள்ள இடம், நீராதாரம் அமைந்துள்ள பகுதியாகும்.

வண்ணாங்குளம் ஊராட்சியில் உள்ள மலைகளில் இருந்து வழிந்து வரும் தண்ணீர் செல்லும் கால்வாய் வழித்தடத்தில் மலக்கசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவுள்ளனர். மலையில் இருந்து வரும் தண்ணீரை சேமிக்க தடுப்பணை உள்ளது. இதன் அருகேதான், திட்டத்தை அதிகாரிகள் நிறைவேற்றவுள்ளனர். கால்வாய் வழியாக செல்லும் தண்ணீரானது பெரிய அய்யம்பாளையம், சிறிய அய்யம்பாளையம், பாளைய ஏகாம் பரநல்லூர், மேல்நகர், முனியங்குடிசை உள்ளிட்ட 10 கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு சங்கிலி தொடராக தண்ணீர் செல்கிறது.

மலக்கசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால், நீராதாரம் அடியோடு பாதிக்கப்படும். திட்டத்துக்காக கால்வாயின் ஒரு பகுதியை மறைத்து, சுமார் 500 மீட்டர் அளவுக்கு சமப்படுத்தியுள்ளனர். நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, சுகாதாரமான குடிநீர் கிடைக்காது. விவசாய பயிர்களுக்கும் தண்ணீர் பாய்ச்ச முடியாது. இதனால் சுற்றுப்புற பகுதி கிராமங்களில் உள்ள சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களின் சாகுபடி கேள்விக்குறியாகும். மேலும், கால்நடை மேய்ச்சலுக்கும் கேடு விளைவிக்கும். நோய் தொற்று ஏற்படும்.

மலக்கசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டதால், விவசாயம் மற்றும் கூலி தொழிலாளர்களாகிய நாங்கள், பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும். பொதுமக்களின் நலன் கருதி, திட்டத்தை கைவிட வேண்டும் என தமிழக அரசுக்கும், மாவட்ட மற்றும் பேரூராட்சி நிர்வாகத்துக்கும் கோரிக்கை விடுக்கிறோம். இது தொடர்பாக பேரூராட்சி நிர்வாகம், ஆரணி சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மனு அளித்துள்ளோம். எங்கள் கோரிக்கையை மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். திட்டத்தை கைவிட மறுத்தால் விரைவில் போராட்டம் நடத்தப்படும்” என்றனர்.

x