ஆங்கில கவிதை போட்டியில் மாநில அளவில் 3ம் இடம்: அரியலூர் அரசு பள்ளி மாணவி அசத்தல்!


அரியலூர்: தமிழக அரசு சார்பில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் ஆங்கிலத்தில் திறன் பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில், ஆங்கில கவிதை எழுதுதல், கதை சொல்லுதல் போட்டிகளை நடத்தி, அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில், மாவட்ட அளவில் நடத்தப்பட்ட ஆங்கில கவிதை எழுதுதல், கதை சொல்லுதல் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகள், சென்னையில் பிப்.28-ம் தேதி நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர். இதில், அரியலூர் மாவட்டம் இடையத்தான்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் மாணவி தர்ஷினி ஆங்கில கவிதை எழுதும் போட்டியில் மாநில அளவில் 3-வது இடம்பிடித்து வெற்றி பெற்றார்.

ஆங்கில கதை சொல்லுதல் போட்டியில் இதே பள்ளியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி ரகசியா 10-வது இடத்தை பெற்றார். தொடர்ந்து, அந்த மாணவிகள் நேற்று பள்ளிக்கு வந்த நிலையில், பள்ளி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், மாவட்ட அளவில் நடைபெற்ற ஆங்கில கவிதை எழுதும் போட்டிகளில் வெற்றிபெற்ற அதே பள்ளியைச் சேர்ந்த 2 மாணவிகளுக்கும் இந்த உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், ஆங்கில ஆசிரியர் எமல்டா குயின்மேரி உட்பட அனைத்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

x