நாமக்கல்: கடந்த 5 நாட்களாக முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து சரிந்து நேற்று ரூ.3.80 என நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால், கோழிப் பண்ணையாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் (என்இசிசி) நாமக்கல் மண்டல கூட்டம் நேற்று அதன் தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடந்தது. இதில், ரூ.4 ஆக இருந்த முட்டை கொள்முதல் விலை 20 பைசா குறைந்து ரூ.3.80 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த பிப்.27-ம் தேதி ரூ.4.90 ஆகவும், 28-ம் தேதி ரூ.4.60, மார்ச் 1-ம் தேதி ரூ.4.20, 2-ம் தேதி ரூ.4 ஆக இருந்த நிலையில், நேற்று மீண்டும் 20 பைசா விலை சரிந்ததால், கோழிப் பண்ணையாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக கோழிப் பண்ணையாளர்கள் கூறும்போது, “ஆந்திர மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் அச்சத்தால், அங்கு முட்டை விற்பனைக்குச் செல்வது குறைந்துள்ளது. மேலும், வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால், நுகர்வு குறைந்துள்ளதால் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால், பண்ணையாளர்கள் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது” என்றனர். கோழி விலை: பிராய்லர் கறிக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.105, கறிக்கோழி உயிருடன் ரூ.65 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.